கொள்கைக்காகவே கட்சிகளும் தலைவர்களும்!

  நாம் விரும்பும் கருத்துகளுக்கேற்ற தலைவர்களைப் பின்பற்றி அவர்களது கட்சியில் நாம் ஈடுபாடு காட்டுகிறோம். அல்லது நமது கொள்கைகளுக்கேற்ற கட்சியை விரும்பி அதன் தலைவர் மீது பற்று வைக்கின்றோம். ஆனால், நாம் விரும்பும் கொள்கைகளில் இருந்து அல்லது நம்மை ஈர்த்த கொள்கைகளில் இருந்து தலைவர்கள் விலகினாலும், நாம் கொத்தடிமைகளாக இருந்து அவற்றுக்கு மாறான கருத்துகளைத் தெரிவிக்கும் தலைவர்களைப் போற்றுகிறோம். இந்தக் கொத்தடிமைத்தனத்தால்தான் நாடு அழிவினைச் சந்திக்கிறது. எனவே, நாம் கொள்கைளுக்கு மாறாகக் கடசியும் தலைவர்களும் தடம் புரண்டால் நம் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.  அவ்வாறில்லாமல் என்ன முரண்பாடாகச் சொன்னாலும் செயல்பட்டாலும் அவர்கள் காலடிகளே அடைக்கலம் என்று இருக்கக் கூடாது.  நம்மால் கட்சித்தலைமைக்கு எதிராகப் பேசவோ செயல்படவோ விருப்பம் இல்லையெனில் விலகியேனும் எதிர்ப்பைக் காட்ட வேண்டும்.
  அப்படி இல்லையேல் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியையும் சார்ந்து இராமல் கொள்கைகள் அடிப்படையில்  எந்தக் கட்சியாக இருந்தாலும் ஆதரவு தர வேண்டும்.
  நாம், கட்சியின் கொத்தடிமைகளாக இருப்பதால், கட்சித்தலைவர்கள் மொழி, நாட்டு, இன நலனுக்கு எதிராகச் செயல்பட்டாலும்  அதற்கேற்ப நம்மை மாற்றிக் கொள்கிறோம் அல்லது அமைதி காக்கிறோம்.
  சான்றுக்குச் சில பார்ப்போம். தமிழர் நலன் குறித்துப் பெரிதும் பேசிய கட்சி தி.மு.க.  அதன் தலைவர் கலைஞர் கருணாநிதியின் உரையாலும் எழுத்தாலும் தமிழ் உணர்வு பெற்றவர்கள் மிகுதி. இருப்பினும் தமிழர் நலனுக்கு எதிராக அவர் நடந்துகொண்டபோதும் கட்சியினர் வாய்மூடி அமைதிதான் காத்தனர். ஈழத்தில் படுகொலை நடந்த பொழுது அதற்குக் காரணமான பேராயக்கட்சி(காங்.) உடன் அவர் நெருக்கமாக இருந்து உடன்பட்டபொழுதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தனிப்பட்டுப்பேசும்பொழுது தங்கள் தலைவரின் கருத்துகளுக்கு எதிராகப் பேசினாலும், பொதுவில் அவரை ஆதரித்தனர். எனவே,  தடம் புரண்ட பாதையைச் சரியாக்காமல், தவறான பாதையிலேயே கட்சி சென்றது. ஈழத்தமிழர்கள் பேரளவு  படுகொலை செய்யப்பட்டபொழுதும்  நிலையாமை பேசி இயற்கை என்பதுபோல் கலைஞர் எழுதிய போதும் எதிர்ப்பு வரவில்லை. இதன் தொடர்ச்சியாக இலங்கைத்தமிழர் என்றும் ஈழத்தமிழர் என்றும் அழைக்கப்படுபவர்களைச் சிங்களத் தமிழர் என்று சொல்லி  இலங்கையைச் சிங்கள நாடாகத் தலைவர் கலைஞர் கருணாநிதி குறிப்பிட்ட பொழுதும் மூளை மழுங்கிக் கிடந்தனர் கட்சியினர்.
 தி.மு.கவைமட்டும் குறை கூறுவதாக எண்ண வேண்டா. எல்லாக் கட்சியிலும் அதே நிலைதான். தமிழுணர்வுடன் பேசும் ஒருவர் பேராயக்கட்சி(காங்.) ஆதரவாளராக மாறியதும் அக்கட்சியினரிடம் தமிழர் நிலையை உரைப்பதற்கு மாற்றாக அக்கட்சியின் தமிழர் எதிர்ப்பில் பேசத்தொடங்கி விடுகின்றனர்.  கொலைக்குற்றவாளிகள் தண்டிக்கப் பெற்றாலும்  காப்புவிடுப்பில்(பரோலில்) விடுவிப்பதும் முன்கூட்டி விடுதலை செய்வதும் தண்டனையின் – சீர்திருத்தத்தின் ஒரு பகுதியே! ஆனால், நெறிமுறை தவறி, இராசீவு கொலையில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுத் தண்டனையால்  துன்புறுவோர்கள் மீது பரிவு காட்டாமல் ,  பிற தண்டனைவாசிகளுக்குக் கிடைக்கும் வாய்ப்பிற்கு எதிராக அதன் தலைவர்கள் பேசுகின்றனர். அண்மையில் அதன் தமிழகத்தலைவர் திருநாவுக்கரசர், எழுவர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசியதும் இவ்வகையில்தான். திருச்சி வேலுச்சாமி மட்டும்தான் உண்மையை எடுத்துரைத்து அவர்கள் விடுதலைக்குச் சார்பாகக் குரல் கொடுத்து வருகிறார்.    பேராயக்கட்சி அல்லது பாசகவின் தமிழகத்தலைவர்கள்இந்தியத்தலைமைகளுக்கேற்ப ஆட்டம்  போடாமல்தமிழர்களின்உணர்வுகளைத் தங்கள் தலைமைகளிடம் எடுத்துரைத்தால் அவர்களும் திருந்த வாய்ப்பு உள்ளது. மாறாக இவர்கள் நடந்துகொள்வதால் இக்கட்சிகளின் தமிழ்ப்பகைப் போக்கு வளர்நது கொண்டே போகின்றது.
  பேராயக்கட்சியில் இருந்தபொழுது வாய்மூடி அமைதி காத்த வாசன் இப்பொழுது மீனவர் நலன்தமிழ்நாட்டு நலன்பற்றியெல்லாம் பேசுகிறார். அக்கட்சியில் இருந்தபொழுதே இவர் இவ்வாறு பேசியிருந்தால் இந்தியத்தலைமை திருந்த வாய்ப்பு இருந்திருக்கும் அல்லவா? ஆனால், இதையும் நிலையான கொள்கை என்று சொல்ல முடியாது. நாளையே அவர், இந்தியக்கட்சியில் சேர்ந்து விட்டால் மீண்டும் அமைதியாகி விடுவார்.  திருநாவுக்கரசர் அல்லது வாசனுக்கு மட்டுமல்ல, இஃது இளங்கோவன் முதலான எல்லாத் தலைவர்களுக்கும் பொருந்தும்.
  புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மரு.கிருட்டிணசாமி பாசகவுடன் உறவு வைப்பதால், தணிந்த சாதியினருக்கு – ஒடுக்கப்பட்ட இனத்திற்கு – எதிராக நடந்துகொண்டு அப்போக்கே சரியென வாதிட்டு வருகிறார்.  சாதித்லைவர்களை  வளைப்பதன் மூலம் சாதியினரை ஒடுக்கி வைக்கலாம் எனக் கருதும் பாசகவின் போக்கிற்குத் துணை நின்று தமிழ்நாட்டிற்கு எதிராக நடந்துகொள்வதும்  தன்னலம் மட்டுமல்ல! அடிமைத்தனத்தின் வெளிப்பாடே!
  மூளைச்சலவை செய்யப்படும்  பொதுவுடைமைக்கட்சியினர் தத்துவங்களைத் திறம்பட உரைததாலும் கொத்தடிமைத்தனத்தால் கட்சிகளின் தமிழர் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குத் துணை நிற்கின்றனர்.
  திராவிடம் என்பது பகுத்தறிவு, தன்மானம், தன்மதிப்பு என்பவற்றின் குறியீடுதான். அந்த வகையில்தான் திராவிட இயக்கம் அல்லது திராவிடக்கட்சிகளின் பெயரில் திராவிடம் உள்ளது. ஆனால், இவற்றிற்கு மாறாக அதிமுக செயல்பட்டாலும் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து ஆதரிப்போரே அக்கட்சியில் உள்ளனர்.  முடைநாற்றமெடுக்கும் மூடநம்பிக்கைச் சேற்றில் உழல்பவர்களாக அக்கட்சியினர் இருப்பது குறித்துச்சிறிதும் வருந்தவில்லை.  தலைமையை நற்பணிகளுக்காகப்போற்றுவது என்பது வேறு! தலைமை என்ன சொன்னாலும் ஆமாம்  என்று சொல்லி அடி வீழ்வது  வேறு!
 ஊழலில் கட்சிகள் ஊறியிருக்கும் பொழுது தாமும் அவற்றுடன் இணையும் பொழுது நாட்டில் எங்ஙனம் நேர்மையான ஆட்சி நடைபெறும்? ஆட்சியில் நேர்மையில்லையேல், மக்கள் தாம் அடைய வேண்டிய பயனை அடையாமல்போகத்தானே செய்வர்! கட்சியினரும் மக்களில் ஒரு பகுதியினர்தாமே! இதை உணராமல் ஊழலுக்குத் துணை நிற்கும் இவர்களை என்ன செய்வது?
  பெருந்தலைவர் எனப் போற்றப்படும் காமராசர் தாம் சார்ந்த கட்சியின் கொள்கையால் “நாம் இந்தியர்கள், இந்தியாவில் எங்கிருந்தால் என்ன?” என்று தமிழ்த்தேசியத்திற்கு எதிராக நடந்துகொண்டதால்தானே தேவிகுளம், பீர்மேடு, சித்தூர், திருப்பதி, பெங்களூரு, கோலார் முதலான தமிழகப்பகுதிகள் அண்டை மாநிலங்களுடன்  இணைக்கப்பட்டன.   ஆற்று நீர்ப்பங்கீட்டுச் சிக்கல் அயல்மாநிலங்களில் தமிழர்கள் துன்புறுத்தப்படல் எனத் தொல்லைகள் தொடர்வதும் இவற்றால்தானே! கண்மூடித்தனமாகக் கட்சித்தலைமையை ஆதரித்ததால் வந்த தீவினை, வரும் தீவினைகள் மிகுதியன்றோ?
    நெடுவாசல், கதிராமங்கலம், (நீட்)பொதுத்தேர்வு, இந்தித்திணிப்பு, சமற்கிருதத் திணிப்பு என நமக்கு அழிவு தரும்  பலவற்றையும்  பாசக அரங்கேற்றி வந்தாலும் தமிழகத்தலைவர்களும் கட்சியினரும் அவற்றிற்கு எதிர்ப்புக் குரல் கொடுக்காததால்தானே நம் உணர்வு என்ன என்பதை அக்கட்சியின் இந்தியத் தலைமை புரிந்து கொள்ளாமல் தலைவிரித்தாடுகிறது!
  இவ்வாறு கட்சிக்கொத்தடிமைத்தனத்தால் நாம் அடையும் தீமைகள், நம் இனம் எதிர்நோக்கும் அழிவுகள் எனப் பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம். நாம் இனியேனும் திருந்த வேண்டும். நமது  பொது நலனுக்கு எதிரான  கட்சிச்செயற்பாடுகளைத் துணிந்து எதிர்த்துக்குரல் கொடுக்க வேண்டும்.  பொதுமேடையில் பேசுவது கட்சிக்கட்டுப்பாட்டிற்கு எதிரானது எனக் கருதினால்,   தனிப்பட்ட  முறையிலும் கட்சிஅமைப்பு தொடர்பான கூட்டங்களிலும் மக்கள் குரலை எதிரொலித்து தம்கட்சியின் நலனுக்காகவாவது தமிழர் பகைப்போக்கைக் கைவிட வலியுறுத்த வேண்டும். இவ்வாறு செய்வதுதான் இந்தியக்கட்சிகளின் வளர்ச்சிக்கும் நல்லதாகும்.
 அப்பொழுதுதான் கட்சியால் வழிநடத்தப்படும்ஆட்சியும் நமது நலனில் கருத்து செலுத்தும்.
  இனிமேலாவது மனத்திற்குக் கடிவாளம் போடாமல் ஆராய்ந்து பொதுநலன்  தொடர்பான தலைவர்களின் செயல்பாடுகளுக்கு மட்டும் ஆதரவு தருவோம்! மாறான கருத்துகளுக்குத் தடைபோடுவோம்!
 தமிழ்நாட்டில் இருக்கும் எக்கட்சியாயினும் தமிழர் நலன், தமிழ்மொழி நலன், தமிழ்நாட்டு நலன், தமிழின நலன் எனத் தமிழ்ப்பாதையிலேயே நடைபோடச்செய்‌வோம்!
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. (திருவள்ளுவர்திருக்குறள் 423)
 அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை  : அகரமுதல 210, ஐப்பசி 12-18, 2048 /  அட்டோபர் 29 – நவம்பர் 04,  2017