நோய்வாய்ப்பட்ட செயலலிதா மரணத்தில் என்ன மருமம்?

  செயலலிதா முதல்வராகச் செயலபட்ட பொழுதே அவர்  நோய்க்கு ஆளாகியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்தன.  பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை என்றும்  ஒரே நாளில் எடுக்கப்பட்ட படங்களை வெவ்வேறு நாளில் எடுக்கப்பட்டனபோல் காட்டி அவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாகவும் செய்திகள் வந்தன. இவை யாவும்  செயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்னரே நோய்வாய்ப்பட்டு இருந்தார் என்பதை மெய்ப்பிக்கின்றன.
   நோய்வாய்ப்பட்டவர் மருத்துவத்தில் பயனின்றி மரணமுற்றதைக் கொலைபோல் கருதிக் கூறுவது ஏன் என்று தெரியவில்லை.
  செயலலிதாவைச் சாகடித்த பின்னரே மருத்துவமனையில் சேர்த்ததாகவும் ஊடகங்களில் தெரிவித்தனர். அவ்வாறு தெரிவித்தவர்களே, மருத்துவமனையில் எவ்வப்பொழுது எந்தெந்த மருந்துகள்  கொடுக்கப்பட்டன, என்ன வகையான மருத்துவம் பார்க்கப்பட்டது என்றெல்லாம் எழுதினர். அவர் உயிரற்ற உடலாகத்தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தால்இவையெல்லாம் தேவையில்லையே!
  மருத்துவமனையில் செயலலிதா இருந்த பொழுது அவருக்கு நெருக்கமாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வதற்காகக் கருத்து கூறினவர்கள் எல்லாம் இன்றைக்கு (அவரிடமிருந்து அல்லது)  அவருடைய உற்ற தோழியான சசிகலாவிடமிருந்து ஒதுங்கியிருந்ததாகக் காட்டிக் கொள்வதற்காக மாறான கருத்துகளைக் கூறி வருகின்றனர்.
  பா.ச.க. மோடிவித்தையைக் காட்டாமல் இருந்திருந்தால், பன்னீர்தான் முதல்வராகத் தொடர்ந்திருப்பார். வெவ்வேறு அணிகள் உருவாகியிருக்காது. மோடி மரத்தடியில் ஞானம் பெற்ற புதிய புத்தர்களான பன்னீர், எடப்பாடி பழனிச்சாமி முதலான இன்றைய எதிர்ப்பாளர்கள் அனைவருமே சசிகலாவின் காலடியில்தான் வீழ்ந்திருப்பர்.
  செயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த பொழுது அவர்  இருந்த பகுதியே இரும்புக்கோட்டைபோல் விளங்கியது. அப்பொழுது கை கட்டிவாய் பொத்தி இருந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு வாள்வீச்சு வீரர்கள்போல் காட்டிக் கொள்கின்றனர்.
  செயலலிதாவிற்கு முன்பே ஏன் மருத்துவம் பார்க்கவில்லை என்று  கேள்வி வேறு. அவர் என்ன சிறு குழந்தையா? நாட்டை வழிநடத்திச் செல்லும் முதன்மைப் பொறுப்பில் இருப்பவர்  மருத்துவம் பார்த்துக் கொள்ளவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? அவர் பார்த்துக்கொண்டுதான் இருந்திருக்கிறார். வெளிநாட்டிற்குச் சென்று மருத்துவம் பார்க்கவில்லை என்பது உண்மைதான். நம் நாட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் அல்லது அயல்நாடு சென்றால்  ஆட்சி கவிழ்க்கப்பட்டு விடும் என்ற அச்சம், அல்லது நாளும் குவியும் செல்வத்திற்கான கருவூல வாயில்கள் அடைபட்டு விடும் என்ற கவலைபோன்றவற்றால் வெளிநாடு செல்லாமல் இருந்திருக்கலாம். அதற்காக உடனிருந்தவரைக் குற்றம் சொல்லி என்ன பயன்?
  அவரை ஏன் காட்சிப்பொருளாகக் காட்டவில்லை என்று கேள்வி வேறு. அவர் அவ்வாறு நலிவுற்ற தோற்றத்தைக் காட்ட விரும்பவில்லை என்றால், முன்னர் மருத்துவமனையில் இருந்த பொழுது இரவு உடையுடன் படத்தை வெளியிட்டாரே என்கின்றனர். அப்பொழுது இருந்த தோற்றப்பொலிவு இ்ப்பொழுது இல்லாமல் போனதால் இந்த முடிவு எடுத்தது இயற்கைதானே!
  திரையுலகம் சாராதவர்களே ஒப்பனையுடன்தான் காட்சியளிக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது அவர் அவ்வாறு எண்ணியிருப்பதில் வியப்பேதும் இல்லை. ஒரு முறை நடிகை மனோரமா,  தன்னிடம் செவ்வி/பேட்டி எடுத்தவர் தன்னைப் படம் பிடிக்க முற்பட்ட பொழுது அப்போதிருந்த இயல்பான தோற்றத்தில் பார்க்க நேயர்கள் விரும்பமாட்டார்கள் என மறுத்தார். அவர் மட்டுமல்ல, திரையுலகக் கலைஞர்கள் பலரும் அவ்வாறுதான் உள்ளனர். எனவே, அதனைக் குறைகூறிப் பயனில்லை.
 சசிகலா பண்டுவத்தை/சிகிச்சையைக் கமுக்கமாக வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்துபவர்கள் வாய்கள் அப்பொழுது தைக்கப்பட்டிருந்தனவா? “இல்லை, அஞ்சி அஞசிச் செத்தோம்” என்கிறார்களே! அப்படியானால் இப்பொழுதும் தில்லிக்கு அஞ்சி வாழ்கிறார்கள் என்பது உண்மையாகத்தானே இருக்கும். உண்மையைக் கூற அஞ்சுபவர்கள்,  நேர்மைக்கு இடம் தராதவர்கள்,  தலைமைப் பொறுப்பிற்கு எங்ஙனம் தகுதியானவர்களாக இருக்க முடியும்?
  சசிகலா, செயலலிதாவைக் கொலை செய்ததாகக் கூறுகிறார்களே, அவரைக் கொல்வதுதான் நோக்கம் என்றால், முன்னரே கதையை முடித்திருக்கலாமே! இருவருக்கு மிடையில் கருத்து மோதல் இருந்தது என்கிறார்கள். உறவினர்கள்  இடையேநண்பர்கள் இடையே இவ்வாறு மோதல்கள் வருவது இயற்கைதானே! கை நீட்டுவதும் பின்னர் வருந்தி அழுவதும் கூட நாளும் குடும்பங்களிடையே நடப்பதுதானே! அவ்வாறு  கொல்ல வேண்டுமென்றால், மருத்துவமனையில் சேர்ந்த உடனேயே உயிர்பிரிந்து விட்டதாக அறிவித்திருக்கலாமே!
  ஒட்டிக்கொண்டு ஊசலாடிக்கொண்டிருக்கும் உயிரை எப்பாடுபட்டாவது பிடித்து வைத்துக்கொள்ள முயன்றதை அதை வெளிப்படுத்தவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, வேறுவகையாகக்  கூறுவது தவறல்லவா?
  பல்வேறு நோய்களுக்கு ஆளாகி,  மருத்துவமுறைகளால், அவற்றை விரடட இயலாமல் போவது  நோயர்கள் நிலை என்பதை  மருத்துவமனைகள் நாளும் கூறுகுின்றனவே! அவ்வாறிருக்க, 75 நாள் மருத்துவம் பார்த்தபின்னர், ஏதோ முழு நலத்துடன் இருந்தவர் திடீரென்று இறந்ததுபோல், மருமக்கதைகள் எழுதுவது  ஏன் எனத் தெரியவில்லை.
  உசாவல்/விசாரணை  ஆணையம் என்பதே ஒன்றை ஆறப்போடவும் சிலருக்கு  ஊதியம் வழங்கவும் அமைக்கப்படுவதுதான். அவர் வீட்டை நாட்டுடைமைஆக்கி மக்கள் பணத்தைத் தண்டமாக்கும் பொழுது் இப்படியும் ஏன் கூடுதல் தண்டச்செலவு?
  உண்மைஅறிய வேண்டுமென்றால்,  நினைவில்லாத செயலலிதா எப்படி பன்னீர்செல்வத்திற்குத் தன் பொறுப்பை ஒப்படைக்கச் சொன்னார்?  இறப்பு அறிவிப்பிற்கு முன்னரே முதல்வர் பொறுப்பேற்க  எப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது- அவருடன் அதிகாரிகள் கலந்துரையாடியது எங்ஙனம் என முன்னுக்குப் பின் முரணாகக் கூறுபவர்களை மட்டும் தளையிட்டு உசாவினால் போதும். குற்றவழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்காமல் ஆணையம் அமைப்பது  மக்களின் பணத்தை வீணாக்கும் திட்டமேயன்றி வேறல்ல!
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும். (திருவள்ளுவர், திருக்குறள் 293)
அன்புடன்  இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை : அகரமுதல 206,  புரட்டாசி 15 – 21,   2048 /  அட்டோபர் 1 – 7,  2017