அரசியல்வாதிகளே!  நற்செயல் விதையுங்கள்!

புகழை அறுவடை செய்யுங்கள்!

  அரசியல்வாதிகள் மக்கள் பணிக்காக அரசியலில்  ஈடுபடுவதாகக் கூறுகின்றனர்.  ஆனால் மக்கள் நலனுக்காக வருவதாகக்  கூறுபவர்கள் தங்களையும் தங்கள் சார்ந்தவர்கள் நலன்களையுமே கவனத்தில் கொண்டு தங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். அரசியல் என்பது வணிமாக்கப்பட்டதால், சிறு முதல் போட்டு,  பெரு முதல் எடுப்பதுபோல், தேர்தல் நேரங்களில் மக்களுக்கு அன்பளிப்புகள் வழங்கி வெற்றியை  ஈட்டுகின்றனர். வெற்றி  பெற்றதும் மக்கள் நலனில் கருத்து செலுத்தாமல் போட்ட முதல்தொகையை எடுப்பதில் கவனம் செலுத்தி ஊழலில் ஈடுபடுகின்றனர். அன்னக்காவடியாக இருந்தவர்களும் மன்னனைப்போல் செல்வம் பெற்று விடுகின்றனர். வெற்றிக்காகத் தாம் அளித்த வாக்குறுதிகளையும் மறந்து விடுகின்றனர். மக்கள் வெறுப்பிற்கும் ஆளாகின்றனர். ஆனால், மக்களின் வெறுப்பு அடுத்த  தேர்தல் தொடங்கும்வரைதான்.
  தேர்தல் வந்தது என்றால் மக்களுக்கு வாங்க வேண்டும் என்ற கை அரிப்பு வந்து விடுகிறது. எனவே, வாக்குறுதி அளித்து அதனை மறந்தவர்கள் போல் இவர்களும் அவற்றை மறந்து விடுகின்றனர். முன்பெல்லாம் வாக்களிக்கப் பணம் பெறுவதை இழிவாகக் கருதியவர்களும் இப்பொழுது மாறிவிட்டனர். “நம் பணம்தான் அவர்களிடம் குவிந்துள்ளது. எனவே, அதில் சிறு பகுதியைப் பணமாகவோ, பொருளாகவோ வாங்கினால் தவறில்லை” என்று எண்ணிவிடுகின்றனர். எனவே, அன்பளிப்புகளுக்கு இரையாகி விடுகின்றனர்.
கழைதின் யானையார்  என்னும் சங்ககாலப் புலவர்,
ஈ என இரத்தல் இழிந்தன்று
என இரத்தலை இழிவாகக் கருதும் தமிழர் நெறியைக் கூறி யுள்ளார்(புறநானூறு 204). ஆனால், மக்களோ இரத்தலையே விரும்பும் வாழ்க்கைக்கு மாறிவிட்டனர்.
   கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்னும் வேந்தர்,
புகழெனின் உயிரும் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; எனத் தமிழ்ப்பண்பைக்
கூறுகிறார்(புறநானூறு, 182).
  புகழென்றால் உயிரையே கொடுக்கமுன்வரும் நம் முன்னோர், பழி வரும் என்றால் உலகமே கிடைத்தாலும் பெற மாட்டார்களாம்!
   இன்றோ  பழிபற்றிக் கவலை யில்லை  இந்த வேளையில் ஒரு  தேவை நிறைவேறினால் போதும் என்று இழிவான இரத்தலை நாடுகின்றனர். ஆகவே, நம் மக்கள் பண்பாட்டில் உயர்ந்து நிற்க வேண்டும் என்று வேண்டுகின்றோம்.
  அது போல் அரசியல்வாதிகள்  புகழ் தரும் செயல்களில் ஈடுபட வேண்டுமே தவிர இழி செயல்களில் ஈடுபடக்கூடாது.
  வாக்காளர்களுக்காகப் பணம், அன்பளிப்பு முதலானவை கொடுக்கக் கோடிக்கணக்கில் செலவழிக்கும் அரசியல்வாதிகள் அவற்றுக்கு மாற்றாக, மக்களுக்கான இலவச மருத்துவமனை கட்டித்தரலாம்; மருத்துவக்கல்லூரிகள் முதலான தொழிற்கல்விக்கூடங்களை நடத்திக் குறைந்த கட்டணத்தில் மாணவர்களைச்  சேர்க்கலாம்;  வேலைவாய்ப்பு நல்கும் தொழிற்காலைகளைத் தொடங்கலாம்; இளைஞர்கள் தொழில் தொடங்க உதவலாம்; அல்லது இவற்றிற்கு அரசு தரும்உதவிகளைப்பெற வழி காட்டலாம். இவ்வாறு நல்ல செயல்களை விதைத்துப் புகழ் என்னும் பயிரை விளைவிப்பதுதான் நீடித்த நலன் தரும்.
   இன்றைய மக்கள்  அறமுறைக்கு மாறான செயல்களுக்குப் பழக்கிக் கொண்டனர். நற்செயல்கள் ஆற்றுவோரை மதிப்பதில்லை. பண்பானவனை ஒதுக்கிவிட்டு ஒழுக்கக்கேடானவரையே போற்றுகின்றனர். உதவுபனைப் புறந்தள்ளிவிட்டு உதைப்பவரையே அணைக்கின்றனர். நேர்மையானவர் மூலம் உதவிகள் பெற்றுக்கொண்டே ஊழல்வாதிகளுடனே உறவு கொள்கின்றனர். மிகவும் இழிவான செயல்கள் மத்தியில் நாம் வாழ்கிறோம். தமிழுக்கும் தமிழர்க்கும் பாடுபடுவோரைத் தோற்கடிக்கின்றோம். நம் பகைவரைத் தோளில் தூக்கிவைத்து ஆடி வெற்றி காணச் செய்கின்றோம். இந்த நிலையை மாற்ற வேண்டியதில் நம்  ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு.  தேர்தலாட்சி முறை உள்ள இவ்வுலகில் அரசியல்வாதிகளுக்குப் பெரும் பங்கு உள்ளது.
  “விதை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்காது” என்பர்.  நற்செயல் என்னும் விதையை விதைத்தால் புகழ் என்னும் பயிரை அறுவடை செய்யலாம் என்பதை உணருங்கள். அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல எல்லார்க்கும் பொதுவான வேண்டுகோள்தான் இது.   எனினும் ஆட்சிப்பொறுப்பில் உள்ள அரசியல்வாதிகளும் ஆட்சிப்பொறுப்பில் அமர எண்ணும் அரசியல்வாதிகளும்  பின்பற்றினால் நாடு நலம் பெறும் ! நாட்டு மக்கள் வளம் பெறுவர்!
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு  (திருவள்ளுவர், திருக்குறள் 231).
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை:  அகரமுதல 181,  பங்குனி 27 , 2048 / ஏப்பிரல் 09, 2017