தலைப்பு, பருமா உண்மைகள் - திரு. ; thalaippu_burmapayana-unmaikal_thiru

பருமாப்பயணம் உணர்த்தும் கசப்பான உண்மைகள்

 பருமா நாடானது, மியன்மா என இப்பொழுது அழைக்கப்பெறும். (சங்கக்காலத்தில் காழகம் என அழைக்கப்பெற்றது.) இங்குள்ள தமிழ்க்கல்வி வளர்ச்சி  மையத்துடன் இணைந்து நந்தனம் அமைவம் இணைந்து இலக்கியப் பெருவிழா விழாவை நடத்தியது. அமைப்பாளர் சந்திரசேகர் தமிழ்நாட்டிலிருந்தும்  ஈழத்திலிருந்தும் தமிழன்பர்களை  அழைத்துச் சென்றார். இந்நிகழ்ச்சி, தமிழ்நாட்டில் இருந்து இலக்கியக் குழு பங்கேற்ற முதல் இலக்கிய விழாவாகும். (இவ்விழாவில் சிறப்புரையாற்ற நான் சென்றிருந்தேன். இவ்வுரையைப் பின்னர்த் தனியே அளிக்கின்றேன்.)
 இவ்விழாவில் மேனாள் அமைச்சர் நல்லுச்சாமி, நீதியாளர் வள்ளிநாயகம், மரு. இராமேசுவரி நல்லுச்சாமி, மூத்த வழக்குரைஞர் அப்துல்கனி, கவிஞர் கீரைத்தமிழன், காஞ்சிப்பட்டு  அரிமா சங்க ஆளுநர் குமணன், ஓய்வுபெற்ற முதல்வர் சரோசினிதேவி கனகரத்தினம்(ஈழம்) முதலான பலரும் பங்கேற்றனர். மியன்மாவைச் சேர்ந்த தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பலரும் தமிழ்க்கல்வி ஆசிரியர்களும் தமிழன்பர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.  நாங்கள் ஆங்கிலச் செல்வாக்கு அங்கே இல்லை என்பதைக் கண்டோம். நல்ல தமிழில் பருமியத் தமிழர்கள் பேசினர்.
 பருமியர்கள் பண்பாட்டுடன் நடந்து கொள்கின்றனர். போக்குவரத்துக் காவலர் ஒருவரைக்கூட நாங்கள் பார்க்கவில்லை. பாதுகாப்பு இடங்கள் தவிர, வேறு எங்கும் காவலர்களை நாங்கள் பார்க்கவில்லை. எண்ணற்ற தமிழ்க்கோயில்கள் உள்ளன. தமிழ் வழிபாடு உள்ள இசுலாமிய, கிறித்துவத் தலங்களும் தமிழ்ப்பணி யாற்றுகின்றன. இவற்றின் மூலம் உணவுக்கொடையுடன்  தமிழ் விழிப்புணர்வையும் உண்டாக்கி வருகின்றனர்.
  இவை  போன்ற பல செய்திகள் மகிழ்ச்சியை அளித்தாலும் வருத்தமான உண்மைகளையும் உணர்ந்தோம்.
  பருமிய இளைஞர்கள் தமிழில் நன்கு பேசினாலும் அவர்களுக்கிடையே பருமிய மொழியில்தான் பேசிக் கொள்கின்றனர். சிறுவர் சிறுமியருக்குத் தமிழ் தெரியவில்லை. அவர்கள் பருமியவழிக்கல்வியில் படித்து வருவதாலும் வீட்டில் பருமிய மொழியே பேசப்படுவதாலும் தமிழை அயல்மொழியாகக் கருதுகின்றனர். பருமிய ஆட்சி முறையால் தமிழ், பள்ளிகளில் இருந்து நீக்கப்பட்டமையால், தமிழ் கற்க வழியின்றிப்பருமிய மொழியைப் படித்து அதையே தாய்மொழி போல் எண்ணுகின்றனர்.
  தேமதுரத்தமிழோசையை உலகமெலாம் பரப்பாவிட்டாலும் அது வாழ்ந்த பகுதியிலாவது நிலைக்கச்செய்ய வேண்டுமல்லவா? தமிழ்நாட்டிலேயே தமிழ் மறைய இடம் கொடுக்கும் நாம் அங்கே  தமிழ் மீட்சி பெற என்ன செய்யப்போகிறோம் எனச் சிந்திக்க வேண்டும்.
  எனினும் தமிழன்பர்கள், கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்க்கல்விப் பள்ளிகளை நடத்தித் தமிழுணர்வை இளந்தலைமுறையினருக்கு உணரத்தி வருகின்றனர். ‘இளந்தமிழர் இயக்கம்’ நடத்தி இளம்பெண்களும் இளைஞர்களும் பொதுப்பணியும் தமிழ்ப்பணியும் ஆற்றிவருவது மகிழ்ச்சியாக உள்ளது.  என்றாலும் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படாதவரை  தமிழ் உரிய வளர்ச்சியைப் பெற இயலாது.
  தமிழ்தான் நம் அடையாளம் எனத் தமிழமைப்பினர் உணர்த்தி வருகின்றனர். ஆனால் அந்த அடையாளம் அரசால் பறிக்கப்பட்டுள்ள சூழலில் அடையாளத்தை எளிதில் மீட்க இயலாது அல்லவா?
  ஏறத்தாழ 15 நூறாயிரம் தமிழர்கள் அங்கு வாழ்கின்றனர். யாரும் எக்கட்சியிலும் ஈடுபடுவதில்லை. பிற இனத்தவருடன் தோழமையுடனே வாழ்கின்றனர். எனினும் 1962 இல் அரசுப்ணிகளில் இருந்து தமிழர்கள் நீக்கப்பட்டனர். இப்பொழுது வரை அரசுப்பணிகளில் தமிழர்கள் இல்லை. அரசுப்பணிகளில் தமிழர் பணியாற்றுவது தமிழர் நலன் மேம்பட உதவும்.
 பாலைவனத்தில் சோலை அமைப்பதுபோல் தமிழ் வழக்கற்றுப்போன சூழலில் பருமியத்தமிழர்கள் தமிழ்ப்பற்றுடன் “தமிழே நம் விழி” என்பதை உணர்த்தி வருகின்றனர். எனவே,   செல்வமுள்ள தமிழர்கள் அறவாணர்களாக விளங்கி  இவற்றுக்கு உதவி வருகின்றனர்.
  ஆனால், இவர்களிடம் எப்படி யெல்லாம் தமிழை வளர்க்கலாம் எனச் சொல்லும் உரிமை நமக்கில்லை. சிறுபான்மையரிடம் தமிழ்உணர்வு இருப்பினும் கல்வியில், வணிகத்தில், கோயிலில். கலையில், ஊடகத்தில் என எல்லா இடங்களிலும் தமிழைத் துரத்திக் கொண்டிருப்பதை நாம்  அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு வருகிறோம். நம்மோடு ஒப்பிடுகையில் பருமியத்தமிழர்களின் தமிழ்த்தொண்டு பாராட்டும்படியாக உள்ளது.
  எனினும் நாம், ஒரு புறம் தமிழ்நாட்டில் தமிழ்நிலைக்கப் பாடுபட வேண்டும். மறுபுறம் தமிழ் வாழாவிட்டால் தமிழரும் வாழ இயலாது என்பதை உணர்ந்து பருமாவில் தமிழை வாழச்செய்ய  வேண்டும்.
  ஆரவாரச்செயல்களை அருஞ்செயல்களாக  எண்ணாமல்,  தமிழ்நூல்கள் அளித்தல்,  தமிழாசிரியருக்குப் பயிற்சி அளித்தல் முதலான உதவிகளுடன் பருமா எனப்பட்ட மியன்மியா நாட்டில்தமிழ் மக்களுக்குத் தமிழ் ஒரு பாடமொழியாகக் கற்பிக்கப்பட உரிய வழிவகைகளை ஆராய்ந்து ஆவன செய்ய வேண்டும்.
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
       பெருமை முயற்சி தரும். (திருவள்ளுவர், திருக்குறள் 611)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 157, ஐப்பசி 07, 2047 / அட்டோபர் 23, 2016
அகரமுதல முழக்கப்படம்02 :Akaramuthala-Logo