Thursday, November 26, 2015

ஆருயிர் அன்புச்செல்வி ஆண்டுகள் நூறு வாழியவே!

அன்புச்செல்வி13 : anbuselvi13

கார்த்திகை 10, 2046 / நவம்பர் 26, 2015 இல்

பிறந்தநாள் காணும்

ஆருயிர் அன்புச்செல்வி

ஆண்டுகள் நூறு வாழியவே!

  சென்னை மாகாண மாநிலக்கல்லூரியில் பயின்று தமிழ் இளங்கலைப் பட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றுத் தங்கப்பதக்கங்கள் பெற்றுப் பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தமிழ்ப்பேராசரியராகப் பணியாற்றிப் பலரைக் கல்வி பயில ஆற்றுப்படுத்தியவர் அறிஞர் முத்துராமலிங்கம்; அப்பொழுதே பல கோடி மதிப்புள்ள 29 வகைச் சொத்துகள் இருப்பினும் அவற்றைப் பிறருக்கு வழங்குவதில் மகிழ்ச்சி கொண்டு உழைப்பிலும் கல்வியிலும் நாட்டம் கொண்டு கல்விப்பணியாற்றியவர். இவர் (மகள் கிருட்டிணம்மாள் வழிக்) கொள்ளுப்பேத்தி என்னும் சிறப்பு அன்புச்செல்விக்கு உண்டு. அது மட்டுமல்ல தன்மதிப்புச் சுடரொளி சிவகங்கை இராமச்சந்திரனாரின் (இளைய மகன் இராசமுத்துராமலிங்கத்தின் ஒரே மகள் என்ற வகையில்) இளையப் பேத்தி எனத் தந்தை வழியிலும் மரபார்ந்த பெருமைக்குரியவர் அன்புச்செல்வி.
 பாட்டி கிருட்டிணம்மாள், மகளிர் அமைப்பு போன்றவை மூலமும் மாவட்ட ஆட்சியகக் குழுக்களில் இடம் பெற்றும் பெண்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் தொண்டாற்றிப் புதுமைப்பெண்ணாகத் திகழ்ந்தவர். இக்குடும்பத்தார் பொதுப்பணிகளுக்கெனத் தங்களுக்குரிய இடங்களைத் தானமாக வழங்கிய பெருமைக்கு உரியவர்கள். அவற்றுள் குறிப்பிடத்தக்கது, இராமநாதபுரம் மன்னரால் தமக்கு அளிக்கப்பெற்ற பி்ரான்மலைப் பகுதியைத் தன்மதிப்புச் சுடரொளி இராமச்சந்திரனார் அங்கு வசிப்பவர்களுக்கே உரிமையாக்கிய கொடைப்பண்பாகும்.
 அன்புச்செல்வி, என்னை மணந்து தமிழ்ப்போராளி இலக்குவனாரின் மருமகள் என்ற சிறப்பும் பெற்றார். எல்லாவற்றிலும் மகிழ்விற்குரியது, தமிழ்ஞாலத்தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்த நாளான நவம்பர் 26இல் பிறந்தநாள் அமைந்ததாகும்.
 பொருளியல் முதுகலை பொருளியல் பட்டம் பெற்றிருப்பினும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் எளிமையாகப் பழகுபவர். குடியிருக்கும் பகுதிகளில் உள்ள சிறுவர் சிறுமிகள் கூட்டம் இவரைச் சுற்றி இருக்கும். அவர்களுக்குத் தமிழ்ப்பாடல்கள், திருக்குறள், பொதுஅறிவு, விடுகதை, பழமொழிகள் பயிற்சி தந்து நல்வழிகாட்டுபவர். இதனால்தான் சிறார் கூட்டம் கூட இருக்கும் என்பது புரிந்திருக்கும். (ஆனால், இப்போதைய பகுதியில் அவ்வாறான வாய்ப்பு அமையவில்லை.) சிறாருக்கு வழிகாட்டுவதால் அவர்களின் பெற்றோருக்கும் இவர்மீது தோழமையும் அன்பும் வருதல் இயற்கையாயமைந்தது.
 தொண்டுள்ளம் மிகுந்த குடும்ப மரபு குருதியல் உறைந்தமையால், பிறருக்கு உற்றுழி உதவும் நற்பண்பு இயல்பாகவே அமைந்தது. அவ்வாறு உதவுவதை உதவியாக எண்ணும் பழக்கமும் இல்லை. பிறர் இன்னல்கண்ட விடத்து வலியச் சென்று உதவும் பண்பில் ஊறியவர். வலியச் சென்று உதவினால் மதிப்பு இருப்பதில்லை என்று பட்டறிவுகள் மூலம் நான் பெற்ற பாடத்தைக் கூறினும் அவ்வாறு உதவுவது நிற்பதில்லை. பாடம் கற்றாலும், உதவும் பண்பு பிறருக்கு உதவுவதற்கே என்னையும் உந்தித்தள்ளுகிறது. ஆனால், இதனால் எத்தீமையும் இல்லை. சான்றுக்கு ஒன்றை நினைவுகூர்கிறேன்.
 மதுரையில் மாவட்ட வருவாய் அலுவலர் குடியிருப்பில் குடியிருந்த பொழுது கல்லூரித் தோழர் மனைவி, ஆனால், அறிமுகமில்லாதவர் வந்து, தன் மகளைப் பொறியியல் கல்லூரியில் சேர்க்கப் பணம் வருவது தடைப்பட்டுள்ளதாகவும் தங்கள் மகளாகக்கருதி உதவுமாறு கேட்டதும், நகையை அடகுவைத்துப் பணம் தந்துள்ளார். (பணம் பெற்றுத் தேவை முடிந்ததும் அவர்கள், வட்டியைக் கட்டிவிடுகிறோம் எனச் சொல்லிப் பணத்தைத் திருப்பித் தர மிகவும் காலந்தாழ்த்தினர்; வட்டியும் தராமல் பெற்ற பணத்தைமட்டும் அளித்தனர்.) பொதுவாக, நாம் பிறருக்கு உதவும் பொழுது அவர்கள் நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கக் கூடாது. ஆனால், அந்த உதவி, நமக்கு வேறு யார் மூலமாவது கிடைக்கும். இதுதான் நடைமுறைக்கணக்கு. இக்கணக்கு மெய்யென்பது பத்தாண்டுகள் கழித்து உறுதியானது.
  எங்கள் மகளைப் பொறியியல் கல்லூரியில் சேர்க்க வேண்டும். அப்பொழுது நான் சம்பளம் பெறா நிலையில் இருந்தேன். எதிர்பார்த்த பணம் வரவில்லை. பணத்தைப் பிறகு கட்டுவதாக மடல் வரைந்து புறப்பட வெளியில் சென்றேன். வாசலில் அப்பொழுது மிகு அறிமுகம் இல்லாத பானுமதி காளிமுத்து அவர்கள் வந்து கட்டணத்திற்கான பணம் தந்தார். (தம் நகைகளை அடகுவைத்துப் பணம் கொண்டு வந்திருந்தார் என்பது பிறகுதான் தெரிந்தது.) ஆனால், கல்லூரிக்குச் சென்றால் பணம் பெற மறுத்துவிட்டனர். “சேர்க்கை முதல்நாளன்று பணம் செலுத்த முன்வந்தும் ஏற்க மறுக்காதது ஏன்” என்று கேட்டால், “கல்லூரியில் சேர்க்கை ஒப்புதல் தந்தவுடனே பணம் கட்டியிருக்க வேண்டும்; எனவே, பணத்தைப் பெறமுடியாது” என்று சொல்லி விட்டனர். மாலை நேரம் நெருங்கும் வரை பொறுப்பானவர்களிடம் மன்றாடியும் இசையவில்லை. நன்கொடை தரவேண்டியவர்கள்தான் முன்னரே பணம் செலுத்த வேண்டும் என எண்ணியிருந்ததைக் குறிப்பிட்டிருப்பினும் கேட்கவில்லை.
 நல்லவேளையாக வேறுவழியில் சிக்கலைத் தீர்த்தேன். அண்ணன் மறைமலை மருகர் பேரா.பொறி. செந்தில்குமார் நண்பர் வருகைப் பதிவு பொறுப்பாளராக இருந்தார். என் மகளைக் கல்லூரியில் சேர்த்தது அவருக்குத் தெரியும். அத்தகைய பிற நண்பர்கள் நிருவாகத்தில் தாங்கள் குறுக்கிட இயலாமையைத் தெரிவித்து விட்டனர். எனவே, இவரிடம் வருகைப்பதிவில் பெயரில்லை எனவும், ஆனால், பாடஏடுகளைத் தந்து உள்ளனர் என்றும் கூறினேன். பாட ஏடுகள் வழங்கும் பிரிவில் பட்டியலில் பெயர் இருந்ததால் அவற்றை வழங்கிவிட்டனர். உடனே, அவர் வருகைப்பதிவேட்டில் பெயரைச் சேர்த்துவிட்டார். இதனால், பணம் கட்டுவது எளிதாயிற்று. பணம் கொண்டுபோயே இந்த நிலை என்றால் அன்றைக்குப் பணம் கட்ட முடியவில்லை எனக் கூறியிருந்தால் என்னாகியிருக்கும். (எங்காவது தொலைவிலுள்ள கல்லூரியில் சேர்ந்திருக்கலாம். எனினும் அதுவும் இன்னல்தானே!) நாம் யாருக்கோ உதவினால் யாரோ நமக்கு உதவுவர் என்னும் அசைக்கமுடியாத நம்பிக்கை இவ்வாறு பலமுறை மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை உணர்த்தும் “ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்” என்னும் பழமொழியைப் பலரும் தவறாகப் புரிந்து கொள்கின்றனர்.
பெயருக்கேற்ப அன்புச்செல்வம் நிறைந்திருந்தமையால்,
அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்
தின்புற்றா ரெய்துஞ் சிறப்பு.(திருவள்ளுவர், திருக்குறள் 75)
என்பது நடைமுறையாயிற்று.
 அன்புச்செல்வி பண்புகள்குறித்துக் குழந்தை வளர்ப்பு, பிறர்நலம் பேணுதல் முதலானவைபற்றிப் பல கூறலாம். எனினும் எல்லாவற்றிலும் தலையாய தான இன்னல் வந்துற்றபொழுது பொறுமையுடன் எதிர்கொள்ளும் பண்பு குறித்து மட்டும் கூற விழைகிறேன்.
  நேர்மையான செயல்பாட்டால் நான், 50 திங்கள் பணியின்றி, பணி ஊதியம்இன்றி அல்லல்பட்டேன். அக்காலத்தைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், இரா.கற்பூரசுந்தரபாண்டியன் இ.ஆ.ப. முதலான பலரும் , “உங்கள் விடாமுயற்சி, நேர்மைப்பண்பிலிருந்து வழாமை, துன்பத்தை எதிர்கொள்ளும் துணிவு முதலானவை தமிழ்ப்போராளி மகனான உங்களுக்கு எளிதானது. ஆனால், குடும்பத்தலைவியாக இருந்து வழக்கத்திற்கு மாறாகக் குடும்பத்தை இடையூறுகளின்றி நடத்துச் செல்லும் பொறுமைப் பாங்குடைய உங்கள் மனைவியே பெரிதும் பாராட்டிற்குரியவர்” எனக் கூறுவர். உண்மைதான். “நேர்மையாய் இருந்து என்னத்தைக் கிழித்தீர்கள்” என்பதுபோல் சொல்லி மன அமைதியைச் சிதைக்காமல், “நேர்மைக்கு எப்படியும் வெற்றி கிடைக்கும். பொறுத்திருப்போம்” எனப் பொறுமையுடன் வாழ்க்கைத் துணையாக இருந்தது பெரிதும் போற்றுதலுக்குரியது.
 போற்றதலுக்குரிய பண்புகள் உடைய மனவைி ஆருயிர் அன்புச்செல்வி ஆண்டுகள் நூறுகடந்தும் எண்ணிய எய்தி, இன்பமும் நலமும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
 அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்






No comments:

Post a Comment

Followers

Blog Archive