திருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும்

2

  இதேபோல், அடுத்த இயலில், ‘கனியிருப்ப’ என்பதற்குப் பிற உரையாசிரியர்கள் விளக்கங்களைத் தொகுத்தளித்துள்ளார்.
  நாக்கின் இயல்பு முதலானவற்றைக்கூறிவிட்டு, கனியிருப்பக் காய்கவரக் கூடாமைக்குப் பின்வரும் வகையில் விளக்கம் அளிக்கிறார்.
1.) கனியைக் கவர்ந்து உண்பதால் உண்டாகும் ஆக்கங்கள்
2.) காய்களை உண்பதால் உண்டாகும் கேடுகள்
3.) கனிச்சொல் சொல்வதால் உண்டாகும் ஆக்கங்கள்.
4.) காய்ச்சொல் சொல்வதால் உண்டாகும் கேடுகள்.
இவ்வாறு ஆழமாக விளக்குவதுடன் இன்சொற்களங்கள் யாவை, வன்சொற்களங்கள் யாவை எனவும் நமக்கு உணர்த்துகிறார்.
  கடுஞ்சொல் வேண்டா, கனிச்சொல் வேண்டும் என்பதற்கு அறநெறிச்சாரம், நீதிநெறி வெண்பா, இன்னா நாற்பது, நான்மணிக்கடிகை, ஆத்திசூடி, கொன்றை வேந்தன், உலக நீதி முதலான அற நூல்களிலிருந்தும் மேற்கோள் தந்து நம் உள்ளத்தில் பதிய வைக்கிறார்.
 திருக்குறள் சிறப்பினை உரைத்து இயலைத் தொடங்குகிறார். மேனாள் தலைமை யமைச்சர் அடல்பிகாரி வாசுபாய், மாநிலங்களவை உறுப்பினர் தருண் விசய், பேராசிரியர் சி.இலக்குவனார், தந்தை பெரியார் ஆகியோர் திருக்குறள்பற்றித் தெரிவித்த கருத்துகளை முறையே ஒவ்வோர் இயலின் தொடக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார்.
  தமிழர்களின் பெயர்கள் தமிழாக இல்லை என்ற அவலம் பெருகிக்கொண்டுள்ளது. நாம் கேட்கின்ற, அழைக்கின்ற, படிக்கின்ற பெயர்கள் பெரும்பாலும் பிறமொழிச் சொற்களாகவே உள்ளன. தமிழ்ப்பெயர் சூட்டுவதற்கான இயக்கம் வலுவடைய வேண்டும். அதற்குத் துணை நிற்கும் வகையில் பேரா. வெ.அரங்கராசன், தம் படைப்புகளில் எல்லாம் நல்ல தமிழ்ப்பெயர்களையே குறிப்பிடுவார். இந்நூலிலும், அருள்மணியன், அருள்வள்ளல், பண்பூர், அன்பகத்தாள், அருட்குன்றன், ஞானச் செல்வம், பேரன்பன், பண்புமலை, சின்னவன், மன்னவன், இன்பன், பண்பன், மான்விழி, குயில் மொழி, குறும்பன், அமிழ்தமணி, குறள்மணி, கூர்மதியன், குடிகாத்தான், பண்புமணி, அறச்செல்வி, பெரியவன், சின்னவன், மூக்கன், கனியன், இனியன், அமுதமொழி, திருவள்ளுவர் பூங்கா, முத்துச்சாமி, தலைமணி, செல்வமலை, வாழவந்தான், இன்சொல்வாயன், அன்புக்குன்றன், அறிவுக் கொழுந்து, வல்லபுரம், நல்லப்பர், மாலையப்பன், மண்ணைப்புரம், திண்ணையப்பர், நாகரிகமணி, அமிழ்த முகிலார், துணிச்சல்மணி, தீரன், சூரன், காரன், வேரன், சொல்மதியன், சட்டக்கோமான், அன்புமலர், பண்பு மலர், அறிவரசன், பணப்பட்டி, பண்ணாயிரம், அவாமணி, செல்வமணி, சொல்மணி, நல்லப்பன், மல்லப்பன், வெல்லப்பன், அறிவுமணி, மணப்புரம், பணமாறன், மணமாறன், துட்டுமணி, வெள்ளைமணி, பிள்ளைமணி என அழகுதமிழ்ப்பெயர்களாகக் கதைப்பாத்திரங்களுக்கும் ஊர்களுக்கும் பூங்காவிற்கும்   சூட்டியுள்ளார். பண்பின் அடிப்படையில் பெயர்கள் சூட்டியதுடன், குடிகாரன் ஒருவர் பெயர், குடிகாத்தான், அறியாமை மிக்க மாணவனின் பெயர் அறிவுக்கொழுந்து, பேராசைக்காரனுக்கு அவாமணி என்பன போன்று, நகைச்சுவைக்காக எதிர்மறையாகவும் சூட்டியிருப்பார்.
  இவர் பயன்படுத்தும் உட்தலைப்புகளும், தொடர்களும் சுவையூட்டுவனவாகவும் அறிவூட்டுவனவாகவும் உள்ளன. சான்றுக்குச் சில
கொடுப்பது கொடுக்கப்படும்
கண்கெட்ட பின் கதிரவன் வணக்கமா?
சற்றுச் சிந்தி்த்தான், அறிவைச் சந்தித்தான்
மனைவிமட்டுமே மாண்புறு துணைவி
மனைவி மட்டுமே மனத்தில் இருக்கட்டும்
இல்லத்தரசி மட்டும் உனது உள்ளத்தரசி
மனைவியே மனத்துக்கு இனியவள்
அன்பு மனைவியிடம் இன்சொல்சொல்லு
வருத்தாத இன்சொல் எவரையும் திருத்தும்
அச்சம் தவிர்த்தால்தான் உச்சம் தொடலாம்; மெச்சப்படலாம்
வள்ளலார் இராமலிங்க அடிகள், மன்னர் சேதுபதி, மதுர கவியார், காரல்மார்க்சு, இலிங்கன், இராமா சாத்திரி, ஊத்துமலை மன்னர் இருதாலய மருதப்பத் தேவர், கவிஞர் அண்ணாமலை(இ)ரெட்டியார், வள்ளல் சுகுணன், சரபோசி மன்னன், பேரறிஞர் அண்ணா, கருமவீரர் காமராசர், மார்க்கு துவைன், கிருபானந்த வாரியார், முதலானோர் வாழ்வில் நடைபெற்ற உண்மை நிகழ்வுகள் மூலமும் திருக்குறள் கருத்துகளைப் பேரா.வெ.அரங்கராசன் பதிய வைத்துள்ளார்.
  பேரா.வெ.அரங்கராசன் குடும்பச் சிறப்புப்பாடல், வேரினில் வெந்நீர், தப்பைத் திருத்துக, எங்கே போவேன், இனிய சொற்கள் என்பனபோன்ற தம்முடைய பாடல்களையும் ஆங்காங்கே இணைத்து நூலிற்கு அழகூட்டியுள்ளார்.
  அருட்பா திருக்குறட்பா என நீண்ட 18 பாக்கள் அடங்கிய இவர் கவிதை, குறும்பா, பெரும்பா, அரும்பா, நறும்பா, அருட்பா, குறட்பா, எனச் சொற்பொருள் பின்வரு நிலையணிக்குச் சான்றாக மிளிர்கிறது.
இப்பா அப்பா   எப்பாஎனப்
பாப்பா வாகச் செப்பாது
முப்பால் முழுதும் படிப்பா
தப்பா வாழ்வு தப்பாது
எனச் சிறார் உள்ளத்தில் பதியும் வண்ணம் முடித்துள்ளார். இப்பாடலில் எறும்பா, இரும்பா, விருப்பா, வெறுப்பா, அறுப்பா, பறப்பா, குறிப்பா என்பனபோன்று ஓசை நயத்திற்காகப் பா என வரும்படியான சொற்களையும் அமைத்துள்ளார். இவரது பாவன்மைக்கு நல்ல சான்றாக இப்பா அமைகின்றது.
 நல்ல தமிழ்நடையையே இலக்காகக் கொண்ட பேரா.வெ.அரங்கராசன், கதைகளைப் பேச்சு வழக்கில் குறிப்பதற்ககாச் சிதைவுச் சொற்களையும் பயன்படுத்தியுள்ளது வருந்தத்தக்கது. எழுதுவதுபோல்தான்பேச வேண்டுமே தவிர, பேசுவதுபோல் எழுதக்கூடாது. மறுபதிப்பிலும் பிற படைப்புகளிலும் தம் கொள்கையிலிருந்து வழுவாது நன்நடை பேணி நற்றமிழ் வளர்க்க வேண்டும்.
  திருக்குறளை உரைவிளக்கமாக மட்டும் அளிக்காமல், ஆன்றோர் உரைகள், அறிஞர்கள் உரைவிளக்கங்கள், வாழ்வியல் நிகழ்வுகள், குட்டிக்கதைகள், ஒத்த கருத்துகள், எனப் பலவகையிலும் பொருட்சுவையுடன் நகைச்சுவையையும் கலந்து பேரா.வெ.அரங்கராசன் நமக்கு நல்விருந்து அளித்துள்ளார். திருக்குறளை விளக்க விரும்புவோருக்கு இந்நூல் பேருதவியாக இருக்கும்.
வாழ்த்துடன்
இலக்குவனார் திருவள்ளுவன்,
ஆசிரியர், அகரமுதல மின்னிதழ்,
Thiru. Tiruuvalluvan, ஒளிப்படம்-இலக்குவனார் திருவள்ளுவன்