தமிழ் 99 விசைப்பலகை மனச்சிதைவை உருவாக்கும்!

  தவறான ஒன்றைச் சரியென நம்பும் மாயை பலரிடமும் உள்ளது. அதுபோன்ற மாயைதான் தமிழ் 99 விசைப்பலகையைச் சரியென நம்புவதும். அரசு, வல்லுநர் கருத்தை ஏற்பது என்ற முடிவில் மாயையை மெய்யென நம்பிய இத் தவறான கருத்தை ஏற்றுக் கொண்டது. இதன் விளைவாக, ஆவணி 14, 2046 / 31.08.2015 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவித்த புதிய கணித்தமிழ்க் கொள்கையில், (தகவல்தொழில்நுட்பவியல் துறையின் 2015-16 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பில் இடம் பெற்றுள்ள தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் புதிய செயல்திட்டங்கள்) “தமிழக அரசால் ஏற்கப்பெற்ற தமிழ்99 விசைப்பலகைப் பயன்பாட்டை அரசு அலுவலகங்களிலும் பொதுவெளியிலும் பரவலாக்குவதற்கு உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்”. என அறிவித்துள்ளது. என்றாலும் அறிவிப்பில் அரசு விழிப்புணர்வுடன்தான் உள்ளது என வெளிப்படுத்தி யுள்ளது. பரவலாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளதே தவிர, கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கவில்லை.
  தமிழ் 99 முறையை ஊக்கப்படுத்துவது அதனை உருவாக்கும் வணிக நிறுவனங்களுக்கு ஆதாயம் அளிக்குமே தவிர, பயனாளர்களுக்கு மன உளைச்சலையே ஏற்படுத்தும். ஏனெனில், தமிழ்த்தட்டச்சு விசைப்பலகை என்பது ‘யளனகப’ என்று சொல்வழக்கில் சொல்லப்படும் 1878 இல் அறிமுகப்படுத்தப்பட்ட (இ)ரெமிங்டன் தட்டச்சு முறையே ஆகும். ‘யளனகப’ / ‘asdfg’   என நாம் நடுவரிசை இடப்பக்க எழுத்துகள் அடிப்படையில் இதைக் குறிப்பிட்டாலும் இடப்புற மேல்வரிசை எழுத்துகளின் அடிப்படையில் ‘கிடபுள்யூஇஆர்டி ‘/ ‘qwerty’ முறை என்றே பிறரால் குறிப்பிடப்படுகின்றது. கணினி விசைப்பலகை ஏன் அகர வரிசையில் இல்லை? என்பது குறித்துத் தமிழ் இந்து நாளிதழில் திரு சா.கி.சுப்பிரமணயின் கட்டுரை எழுதியிருப்பார். இதன் மூலம் ஒரு பகுதி அகரவரிசையைப் பின்பற்றியுள்ள தமிழ் 99 விசைப்பலகையும் தேவையில்லை என்பதை உணரலாம்.
  சுருக்கமாகக் கூறுவதாயின், உலக நடைமுறைக்கு மாறாகவும், இலங்கையில் ஆய்ந்து மறுக்கப்பட்டதைக் கருத்தில் கொள்ளாமலும் விற்பனை நோக்கின் அடிப்படையிலும் பயன்பாட்டு எளிமையைப் புறந்தள்ளியும் நடைமுறையில் உள்ள தமிழ்த்தட்டச்சு விசைப்பலகை முறைக்கு முற்றிலும் மாறாகவும் அறிமுகப்படுத்தப்படும் தமிழ் 99 விசைப்பலகை என்பது கொள்ளத்தக்கதல்ல! தள்ளத்தக்கதே! எனவே, தமிழக அரசு, 16 ஆண்டுகளாகியும் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒன்றைப் பரவலாக்குவது என்பது மக்களாட்சி முறைக்கு எதிரானது என்பதை உணர்நது, தமிழ்99 விசைப்பலகைப் பயன்பாட்டை அரசு அலுவலகங்களிலும் பொதுவெளியிலும் பரவலாக்குவதற்கு உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற தன் கொள்கையைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்..
  1860 இல் தட்டச்சுப்பொறி உருவாக்கப்பட்ட பொழுது அகரவரிசை முறையில் எழுத்துகள் அமைந்தன. நடைமுறையில் இதனால் உழைப்பும் நேரமும் கூடுதலாகச் செலவானதாலும் எழுத்துகளுக்கான விசைகளில் சீர்குலைவு ஏற்பட்டதாலும் புதிய முறையைக் கண்டறிந்தனர். இதில் எந்தெந்த எழுத்துகள் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன, எவ்வெவற்றின் பயன்பாடு குறைவாக உள்ளது, எவையெல்லாம் அருகிய பயன்பாட்டில் உள்ளன எனக் கண்டறிந்து மிகுதியான பயன்பாட்டு எழுத்துகளை நடு வரிசையிலும் அதைவிடக் குறைவான பயன்பாட்டு எழுத்துவரிசைகளை மேல் வரிசையிலும் பிறவற்றைக் கீழ் வரிசையிலும் அமைத்தனர்.
  இதே முறையைப் பின்பற்றியே தமிழ்த்தட்டச்சிலும் பயன்பாட்டு நிலைக்கேற்ப எழுத்துருக்கள் நிரல்பட அமைக்கப்பட்டுத் தட்டச்சுப் பொறி உருவாக்கப்பட்டது. அதே நேரம் மெய்யெழுத்து, உயிர் மெய்யெழுத்துகளைத் தட்டச்சிடும் வகையில் தமிழில் விசைப்பலகை அமைக்கப்பட்டது.
  தமிழ்த்தட்டச்சில் முதலில் மெய்யெழுத்திற்கான குறியீடு (புள்ளி) இகர, ஈகார, உகர, ஊகாரக் குறியீடுகள் யாவும் அசையா நிலையில் இருந்தன. இவற்றைத் தட்டச்சி்ட்ட பின்னர் நாம் உரிய உயிர் மெய்யெழுத்தைத் தட்டச்சிட்டால் மெய்யெழுத்தும் இகர, உகர முதலான உயிர் மெய் யெழுத்துகளும் வரும். அஃதாவது ‘க்’ என்னும் மெய்யெழுத்தைத் தட்டச்சிட வேண்டுமானால், முதலில் புள்ளி எழுத்துருவைத் தட்டச்சிட வேண்டும். புள்ளி தட்டச்சிடப்படும். ஆனால், தாள் உருளை அசையாது. அடுத்து நாம் ‘க’ என்னும் மெய்யெழுத்தைத் தட்டச்சிட்டால் ‘க்’ தோன்றும் உருளையும் அசையும். (மெய்யெழுத்தைத் தட்டச்சிட்ட பின் உரிய உயிர் எழுத்து அல்லது உயிர்க்குறியீடு தட்டச்சிட்டால் உயிர் மெய்யெழுத்து வரும் வகையில் தட்டச்சுப் பொறியை உருவாக்கியிருக்கலாம். ஆனால், அவ்வாறு உருவாக்கியிருந்தால் க்அ, க்ஆ என்பதுபோல்தான் வரும். ஆனால், கணிப்பொறியில் இவ்வாறு உருவாக்கினால், க் + அ = க என்பதுபோல் வரும்.) இப்படித் தட்டச்சிடுவதால் அசையா எழுத்திற்கு மிகுதியான அழுத்தம் கொடுக்க வேண்டி வந்தது; இதனால் தட்டச்சிடும் வேகம் குறைந்தது. எனவே, அதில் மாற்றம் செய்து, எழுதுவதுபோல் உயிர் மெய்யெழுத்தைத் தட்டச்சிட்ட பின்னர் உயிர்க்குறியீடுகளைத் தட்டச்சிடும் வகையில் மாற்றினார்கள்.
  அஃதாவது ‘க’ அடுத்து ‘ப்’ புள்ளி தட்டச்சிட்டால் ‘க்’,   ‘க’ அடுத்து இகரக்குறியீடு அடித்தால் ‘கி’ என்பதுபோல் அமைத்தார்கள். இதுதான் பழைய தட்டச்சு விசைப்பலகைக்கும் புதிய தட்டச்சுப்பலகைக்கும் உள்ள வேறுபாடு. இவ்வாறு மாற்றம் செய்வது தேவைக்கேற்ற சீரான மாற்றம். தட்டச்சில் உரிய மெய்யெழுத்தையும் குறியீட்டையும் அடுத்தடுத்து தட்டச்சிடுவதற்கு மாற்றாக உரிய எழுத்துருவை மாற்று விசையின் மூலம் அடித்தால் உரிய உகர எழுத்து வரும் வகையில் கணித்தமிழ் விசைப்பலகையில் சிலர் மாற்றியுள்ளனர். இவ்வாறு இருக்கும் நிலைக்கேற்பச் சிறு சிறு மாற்றங்கள் செய்வதால் முன்னேற்றமாக அமையும்.
  ஆனால், அடிப்படையையே மாற்றி இடப்பக்க நடுவரிசையில் உயிரெழுத்துக் குறில்கள் அ.,இ,உ, புள்ளி/ஃ,எ ஆகியனவும் இடமேல் வரிசையில் ஆ,ஈ.ஊ,ஏ,ஐ நெடில்களும் இடக்கீழ் வரிசையில் எஞ்சிய ஔ, ஓ, ஒ, உயிரெழுத்துகளும்(வ,ங, உம்) அமையும் வகையில் அமைத்துள்ளனர். இப்படி வரிசைப்படி அமைப்பது என்பது தட்டச்சுத் தோற்றக் காலத்தில் பின்பற்றப்பட்டு கைவிடப்பட்ட ஒன்றாகும். ஒரு முறை சரியில்லை என்று (அறிந்து புதிய முறை) கண்டறிந்த பின்னர் மீண்டும் யாராவது முந்தைய முறைக்கே செல்வார்களா? ஆனால், தட்டச்சுப்பொறி வல்லுநர்களால் கைவிடப்பட்ட முறை ஒன்றைத் தமிழ்க்கணிஞர்கள் பின்பற்றித் தமிழ் 99 விசைப்பலகையை உருவாக்கியுள்ளனரே!.
  நான், ஆங்கிலம்,செருமன், இரசியன், சீனம், முதலான பல்வேறு மொழிகளின் விசைப்பலகையை பார்த்தேன். எந்த மொழியாளரும் அகரவரிசைப்படி எழுத்துகளை அமைக்கும் தவற்றினைச் செய்யவில்லை. நாம்தான் அந்தத் தவற்றைச் செய்து அதனைச் சரியென நம்பிப் பரப்பி வருகிறோம்.
 யாழ்ப்பானத்து விருபா குமரேசன், மொழிமரபிற்கேற்ப குறியீடுகளையும் உரிய எழுத்துகளையும் தட்டச்சிடும் முறையில் அமையாத தமிழ் 99 விசைப்பலகை தமிழ்மரபு மீறிய செயல் என்று (மடலாடல் குழு ஒன்றில்) கூறுவது முற்றிலும் ஏற்கத்தக்கது.
  விசைப்பலகையின் வலப்புற மேல்வரிசையில் இன எழுத்துகள் அடுத்தடுத்து அமையும் வகையில் ற,ன,; ச,ஞ், ; ட,ண.; எழுத்துகளும் வல நடுவரிசையில் ப,ம,; த,ந; எழுத்துகளும் அமைத்துள்ளதாகவும் இதனால் முறையே ற,ன எனத் தட்டச்சிட்டால், ன்ற என்பதுபோல் வரும் என்றும் தமிழ் 99 ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இணை எழுத்தாக வரும்வகையில் விசைப்பலகையை அமைக்க எண்ணியது உண்மையிலேயே பாராட்டிற்குரிய நல்ல சிந்தனை. அந்தச்சிந்தனையாளரை நாம் பாராட்ட வேண்டும். ஆனால், அதனைச் செயல்படுத்திய வகை சரியல்ல.   ஏனெனில், இணை எழுத்துகளைப் பயன்படுத்துகையில் முதலில் இன மெய்யெழுத்தும் அடுத்து வல்லெழுத்தும்தான் அமையும். அதற்கு மாறான இத்தட்டச்சிடு முறை உளவியலுக்கு மாறானது. ன,ற, – ஞ, ச, – ண, ட, – ம, ப, – த, ந என்ற முறையில் அமைத்திருந்தால் வரவேற்றிருக்கலாம். எனினும் நடைமுறையில் உள்ள தமிழ்த்தட்டச்சு விசைப்பலகையில் மிகு பயன்பாட்டிற்குரிய எழுத்துகளை நடு வரிசையில் அமைத்துள்ளதால் அதுவே சிறப்பானதாக அமைகிறது.
  “தமிழ் 99 விசைப்பலகை, கணினியில் தமிழ்ப் பயன்பாட்டை மிகவும் அதிகரிக்கச் செய்யும்” எனக் கணித்தமிழ்ச்சங்கத்தின் தலைவர் வள்ளி ஆனந்தன் (மடலாடல் குழு ஒன்றில்) தவறாகக் கூறுகிறார். விசைப்பலகை அமைப்பிற்கும் தமிழ்ப்பயன்பாட்டிற்கும் தொடர்பு இருப்பதாகக் கருதினால், தட்டச்சு முறையைப் பின்பற்றும் கணிவிசைப்பலகையே ஏற்றது.
  ‘‘தமிழ்99’’ விசைப்பலகை தரப்பாட்டுக்குழு அமைக்கப்பட்டது குழு உறுப்பினர்களான வல்லுநர்கள் நடைமுறையில் இருந்த விசைப்பலகைகளை ஆராய்ந்துதான் தமிழ் 99 உருவாக்கப்பட்டது என்றும் கூறுகிறார்கள். தான்தோன்றித்தனமாகச் சிலர் கணிப்பொறியில் தமிழ்விசைப்பலகையை அமைத்தனர். இதனால்தான் தரப்படுத்தப்பட்ட விசைப்பலகை வேண்டும் என்ற உணர்வு வந்தது. ஆனால், தவறான கணிப்பொறி விசைப்பலகையை ஆராய்ந்தே தமிழ் 99 விசைப்பலகை உருவாக்கப்பட்டுள்ளது. தவறான அடித்தளத்தின்மேல் எழுப்பப்பெற்ற இவ்விசைப்பலகை இதனால் தவறானதாக மாறிவிட்டது. மேலும் இக்குழுவில் தட்டச்சுப் பயிலகங்கள் நடத்தும் யாரும் உறுப்பினராக இல்லை. கண் மருத்துவர்கள்கூடி நெஞ்சு நோய்க்கு மருத்துவம் பாரத்தால் உருப்படுமா? தட்டச்சு வல்லுநர்கள் இலலாமல் அமைக்கப்பட்ட குழுவால் எப்படி தமிழ்விசைப்பலகைக்கு உரிய தீர்வு காண இயலும்? எனவேதான் தமிழ் 99 உளவியலுக்கு ஏற்றதாக இல்லை. இருக்கின்ற முறையில் வேண்டப்படும் மாற்றங்களைச் செய்தால் அது சிறப்பானதாக அமையும். அப்படியில்லாமல் முற்றிலும் புதிய முறையில் அமைத்துள்ளதால்தான் பயன்பாட்டுக் குழப்பம் ஏற்படுகிறது.
விசைப்பலகைத் தரப்பாட்டுக்குழு அமைக்கும்பொழுது கணித்தமிழ் விசைப்பலகைக்குக் கணித்தமிழ் வல்லுநர்கள் கருத்து போதும் என எண்ணியிருக்கலாம். ஆனால், இதற்கு அடிப்படை தமிழ்த்தட்டச்சு விசைப்பலகை என்னும்பொழுது தமிழ்த்தட்டச்சு வல்லுநர்கள் கருத்தறிந்து அதற்குத்தானே முதன்மை அளித்திருக்க வேண்டும்? உரிய வல்லுநர்கள் கருத்தறியாமல் எடுக்கப்படும் முடிவு எப்படிச் சரியாக அமையும்? அதனால்தான் தமிழ் 99 விசைப்பலகை நடைமுறைப் பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமையவில்லை.
  புதிய விசைப்பலகைமுறை உருவாக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, இருக்கின்றனவற்றுள், அவரவர் விருப்பத்திற்கேற்ற விசைப்பலகையைப் பயன்படுத்துமாறு கூறிக் காலப்போக்கில் நிலைக்கும் ஒன்றை ஏற்கலாம். ஆனால், தமிழ் 99 விசைப்பலகையை வலியுறுத்தவேண்டிய தேவை என்ன? “தமிழ்த் தட்டச்சுப் பலகையை தரப்படுத்தவேண்டும்; ஒரே விசைப்பலகையை அனைவரும் பயன்படுத்தவேண்டும் என்பதுகூட அவ்வளவு முதன்மையான ஒன்று என்று நான் கருதமாட்டேன். தமிழ் உள்ளீட்டு முறைகள் பல இருப்பதுதான் சரி என்று கூறுவேன். அவரவர் திறமைக்குத் தகுந்தவாறு தமிழை உள்ளீடு செய்வதே மிகவும் சிறப்பானதாகும்” என்கிறார் பேரா. வாசு அரங்கநாதன். (மடலாடல் குழு ஒன்றில் தெரிவித்த கருத்து.) இதுவே நடைமுறைக்கு ஏற்றதாகும். தரப்படுத்தல் என்று ஒன்றை நாம் வலிந்து புகுத்துவதைவிட, அவரவர்க்கு வாய்ப்பான ஒன்றைப் பயன்படுத்த விடுவதே சிறந்ததாகும். இதன்படி அவரவர் வெவ்வேறு விசைப்பலகையைப் பயன்படுத்துவதால் ஒன்றும் தீமை இல்லை. கை பேசிகளில் ஒற்றை விரலைக் கொண்டு தட்டச்சிடுவோருக்குத் தமிழ் 99 எளிமையாகவே உள்ளது. புதியதாகக் கை பேசி வாங்குவோர், குறிப்பாகத் தமிழ்ப்மேலும், தமிழ்விசைப்பலகையைத் தரப்படுத்துவது என்றால் உலகு தழுவிய நிலையில் அல்லவா இருக்க வேண்டும்?பயன்பாட்டில் முதலில் ஈடுபடுவோர், தமிழ்த்தட்டச்சை அறியாதவர்களாகவோ தமிழ்த்தட்டச்சிற்கான தேவையில்லாத வர்களாகவோ இருப்பின், பார்த்து அடிப்பதற்கு எளிமையான தமிழ் 99 ஐப் பயன்படுத்தலாம். முன்னரே தமிழ்த்தட்டச்சு அறிந்தவர்களுக்கு ‘யளனகப’ முறையே சிறந்தது.
மேலும், தமிழ்விசைப்பலகையைத் தரப்படுத்துவது என்றால் உலகு தழுவிய நிலையில் அல்லவா இருக்க வேண்டும்? கணிணி விசைப்பலகை என்பது தமிழ்நாட்டிலுள்ள தமிழர்க்கு மட்டுமானதல்ல; உலகெங்கும் உள்ள தமிழருக்கும் தமிழ் பயிலும் அயலவர்க்குமான பயன்பாட்டிற்குரியதே என்பதை எண்ணிப்பார்த்திருக்க வேண்டாவா? தமிழ் 99 அவ்வாறு பொதுநிலைப் பயன்பாட்டிற்கானதல்ல! நமக்கு வேண்டியது, எந்நாட்டவராயினும் கணிணியில் தமிழைப் பயன்படுத்துவோருக்கு ஏற்றதான விசைப்பலகை அமைப்பே ஆகும். ஆனால், தமி்ழை ஆட்சிமொழியாக உள்ள இலங்கை நாட்டினர் தமிழ் 99 விசைப்பலகையைப் பயன்பாட்டிற்கு உட்படுத்திப்பார்த்துப் பயனிலை என்ற முடிவிற்கு வந்துவிட்டனர். இலங்கைக் கணித்தமிழ்ப் பயனர்களிடையே மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புக்களின் அடிப்படையில் தமிழ் 99 கைவிடப்பட்டது. எனவே, அவர்கள், புதியதொரு வடிவமைப்பை உருவாக்கி அதனையே ஏற்றுள்ளனர்.
  [“இரெங்கநாதன் விசைப்பலகை அல்லது இலங்கை சீர்தர விசைப்பலகை என்பது இலங்கை அரசினால் சீர்தரப்படுத்தப்பட்ட தமிழ் விசைப்பலகை யாகும். இலங்கையில் அரச அலுவலகங்களிலும் ஏனைய பணிகளிலும் தமிழைக் கணினியில் உள்ளீடு செய்வதற்கு இந்த விசைப்பலகைத் தளக்கோலமே (layout) பரிந்துரைக்கப்பட்டு ஏற்கப்பெற்று பயன்பாட்டிற்கு வந்து விட்டது.” (விக்கிபீடியா)]
  தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள் வாழும் ஒரு நாட்டில் ஆய்ந்து மறுக்கப்பட்டதை நாம் தரப்படுத்தப்பட்டதாக அறிவிப்பின் அது முறையற்றதல்லவா? அஃது அவர்கள் கருத்து, நாம் அதனை ஏற்க வேண்டா என எண்ணினால் தவறல்லவா? ஒரு நாட்டால் மறுக்கப்பட்டதை நாம் ஏன் ஏற்க வேண்டும் என்றாவது தெளிவுபடுத்தப்பட்டுள்ளதா? இல்லையே! நம் நாட்டிலும் கருத்துக் கணிப்பு மேற்கொண்டிருப்பின் தமிழ் 99 தேவையில்லை என்பதே மிகப் பெரும்பாலோனோர் கருத்தாக இருந்திருக்கும். இப்பொழுது கருத்துக் கணிப்பு எடுத்தாலும் அதுதான் விடையாகும்.
  தமிழ் விசைப்பலகைத் தரப்பாட்டுக்குழுவினர் அவ்வாறு பயனர்களிடையே கேட்டறிந்ததாகத் தெரியவில்லை. இருப்பினும் நான் பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றும் தட்டச்சர்கள், சுருக்கெழுத்துத் தட்டச்சர்கள் ஆகியோரிடையே இது குறித்துக் கேட்டுள்ளேன். இதேபோல், 2005 இல், தலைமைச்செயலகத் தட்டச்சர்கள் பலரிடையே தமிழ் 99 விசைப்பலகையைப் பயன்படுத்தாமைக்குக் காரணம் கேட்டுள்ளேன். தட்டச்சு படித்து வந்த எங்களுக்குத் தட்டச்சு்சு முறையே எளிமையானாதும் ஏற்றதுமாகும்” என்றே அனைவரும் இதற்கு விடையாகத் தெரிவித்தனர். தட்டச்சுப் பயிலகங்கள் (வணிகவியல் பயிலகங்கள்), தட்டச்சுச்சங்கப் பொறுப்பாளர்களிடையே கேட்டபொழுதும் அவர்களும் இவ்வாறுதான் கூறினார்கள்.
  மீண்டும் இப்பொழுது தட்டச்சுப் பயிலகத்தினர் சிலரிடையே கேட்டதற்கு வலக்கைப் பழக்கம் உள்ளவர்களை இடக்கைப் பழக்கத்திற்கு மாறுமாறு கட்டாயப்படுத்தினால், மனச்சிதைவு ஏற்படுவதுபோல், விசைப்பலகை மாற்றமும் விரும்பத்தகா விளைவுகளை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தனர். இவ்வாறு தெரிவித்ததுடன், “தமிழ் 99 அடிப்படையிலான புதிய தட்டச்சுப் பொறிகளை வாங்குவதற்குப் பயிலகங்களுக்கு வசதி இல்லை” என்றனர். “கணிப்பொறி மூலம் தட்டச்சு கற்றுக் கொடுக்கலாமே” என்றதற்கு அவர்கள், “சிலருக்குக் கணிப்பொறி மூலம் கற்றுத்தருவது எளிமையாக இருக்கலாம். ஆனால் தட்டச்சுப் பொறி மூலம் தட்டச்சு சொல்லித்தருவதுதான் எங்களுக்கு எளிமையானது” என்றனர்.
  இவ்வாறு உலக நடைமுறைக்கும் பயன்பாட்டிலுள்ள முறைமைக்கும் மாறாகவும்  மற்றொரு நாட்டால் கைவிடப்பட்டதற்கு எதிராகவும் உளவியல் முறைக்கு முரணாகவும் தனியர் வணிக நலனை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்துள்ள பெரும்பான்மையரால் புறக்கணிப்பிற்கு உள்ளாகியிருக்கும் தமிழ் 99 விசைப்பலகை முறையை அரசு பரவலாக்கும் முயற்சியில் ஈடுபடாதிருப்பதே தமிழ் வளர்ச்சிக்கு ஏற்றதாகும்.  அதே நேரம் சிறுபான்மையர் பயன்பாட்டிலுள்ள இதை நீக்கவும் வேண்டா.  ஆனால், கணிப்பொறியில் புதிது புதிதாக விசைப்பலகையை உருவாக்குவதற்குத் தடை விதிக்க வேண்டும். ஒரே விசைப்பலகையிலேயே வேண்டுமாறான விசையமைப்பு முறையைப் பயன்படுத்த முடியும் என்பதால் அரசு அலுவலகங்களில்  வீண் செலவு செய்து தமிழ் 99 விசைப்பலகையை வாங்க இருக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும்.   ஆதலின்,  தகவல் தொழில்நுட்பத்துறையின் செயல் திட்டங்களில் இருந்து தமிழ் 99 விசைப்பலகையைப் பயன்பாட்டைப் பரவலாக்கும் முயற்சி கைவிடப்படுவதாக  அரசுஅறிவிக்க வேண்டும்.
இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 96, ஆவணி 27, 2046 / செப். 13, 2015)