abdulkalam03
  தன் எளிமையாலும் இளைஞர்களிடம் நம்பிக்கை விதைக்கும் உரைகளாலும் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுமைக்கும், சொல்லப்போனால் உலகளாவிய புகழ் பெற்றவர் மேதகு அப்துல்கலாம். அவரின் மறைவு அனைவருக்கும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்துள்ளது. முகநூல் பக்கங்களிலும் பதிபேசிப் பக்கங்களிலும்(வாட்சுஅப்) இப்பொழுது மிக மிகுதியாகப் பகிரப்படுவன அவரைப்பற்றிய நினைவுகளும் புகழுரைகளுமே! சாதி, சமய, இன, மொழி வேறுபாடின்றி அனைவராலும் போற்றப்படும் அளவிற்கு உழைப்பால் உயர்ந்தவராகத் திகழ்கிறார் தமிழ் வழிபடித்துத் தரணி ஆள முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியுள்ளார். எளிய குடும்பத்தில் பிறந்து ஏந்தலாக – தலைவனாக – விளங்க முடியும் என்பதற்கும் எடுத்துக்காட்டாக உயர்ந்துள்ளார். படிக்கும்பொழுதே பகுதிநேரப்பணி பார்த்து,
நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
மேன்மேல் உயர்ந்து நிற்பானும் தன்னை
தலையாகச் செய்வானும் தான்
என்னும் நாலடியார் (428) பாடலுக்கு எடுத்துக்காட்டாகத் தன் முயற்சியால் அறிஞராகவும் தலைவராகவும் திகழ்ந்த செம்மல் அப்துல்கலாம்.
 தம்முடைய எல்லா நிலையிலும் நேர்மை மாறாமல், நாணயம் தவறாமல், உழைப்பு குன்றாமல் உயர்ந்து விளங்கியுள்ளவர் அப்துல்கலாம்.
 அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். (திருவள்ளுவர், திருக்குறள் 611)
என்னும் தமிழ்நெறிக்கேற்ப முயற்சியால் முன்னேற்றம் கண்ட முனைப்பாளர் அப்துல் கலாம்.
  ஆவுல் பக்கிர் சைனுலாபுதீன் அப்துல் கலாம் ( புரட்டாசி 29, 1962/ அக்டோபர் 15, 1931 – ஆடி 11, 2046 / சூலை 27, 2015) தமிழ்நாட்டில்(இராமேசுவரத்தில்) சைனுலாப்தீன்- ஆசியம்மா ஆகிய இணையரின் திருமகனாகப் பிறந்தார். பல்வேறு நிலைகளைத் தாண்டி 2002 சூலை முதல் 2007 சூலை வரை இந்தியக் குடியரசுத்தலைவராக விளங்கினார். பணி நிறைவிற்குப்பின்னரும் மாணவர்களிடையே உரையாற்றி வந்ததில் மகிழ்வு கொண்டார். பதவி நிறைவிற்குப் பின்னரும் மக்களிடையே செல்வாக்குடன் திகழ்ந்த கட்சி சார்பற்ற தலைவர் வேறு யாருமிலர் எனலாம்.
  இவர் வாழ்ந்தபொழுதே, இவரைப்பற்றிய வாதங்கள் ஏற்பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை: இவர் அணு அறிவியலாளர் அல்லர்;   அக்னி, பிருதிவி, ஆகாசு ஏவுகணைகளின் நிதி ஏற்பாட்டு அமைப்பாளராகச்செயல்பட்டுப் புகழ்பெற்று உண்மையான பின்னணி அறிவியலாளர்களின் செயல்பாடுகளை மறைத்து விட்டார்; இந்திரா காந்தி காலத்தில் வெற்றியாக அறிவிக்கப்பட்ட இவரின் இரண்டு விண்வெளித்திட்டங்கள் பெருத்த தோல்விக்குரியன; எனவே, இவை 1980 இல் கைவிடப்பட்டன; கூடங்குளம் அணுவாற்றல் உலைக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தவர் அரசிற்காக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து முரண்பட்டவர்; சாணஎரிவளி(மீத்தேன்) திட்டத்தின் பேரழிவு விளைவுகளை மறைத்து ஆதரவாகப் பேசியவர் என்பனவாகும். இவற்றுள் பின்னிரண்டு தவிர, யாவும் பொதுவாக ஒரு தரப்பாரால் மறுதரப்பார்பற்றிக் கூறுவன போன்றவைதாம். ஆனால், பின்னிரண்டு கொள்கைக்கு மாறாக மக்களுக்குக் கேடு விளைவிப்பனவற்றை ஆதரித்த கொடுஞ்செயல்களாகும்.
 இவை யாவற்றிலும் மிகுதியாகப் பேசப்படாக் குறைகள் இரண்டு உள்ளன. தமிழ்நாட்டில் மீனவர்களிடையே வாழ்ந்திருந்தும் சிங்களப்படைகளின் தாக்குதலால் மீனவர்கள் உயிரிழப்பும் உறுப்புகள் இழப்பும் உடைமை யிழப்பும் முற்றுப்புள்ளியாவதற்கு எம் முயற்சியும் எடுத்ததில்லை.
 கனவு காணுமாறு உலகிற்கெல்லாம் கூறியவர், தனியுரிமையுடன் திகழ்ந்த தங்கள் தாயகம் அடிமைத்தளையிலிருந்து விடுபட்டு மீண்டும் உரிமையுடன் திகழ வேண்டும் எனத் தமிழீழ மக்கள் கண்ட கனவுகள் சிதைக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இவரது இடத்தில் வேறு எவர் இருந்திருந்தாலும் தன்னின மக்கள் அழிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு வாளாவிருந்திருக்க மாட்டார்கள்.
  பா.ச.க.வின் வேட்பாளராகத் தெரிந்துஎடுக்கப்பட்டவர் ஆரியத்தின் அடிவருடியாகத்தானே இருக்க முடியும் என்பதை மெய்ப்பித்தார். தன் பதவி நிலைக்கு மாறாகக் கொலைகார ஆரியப் போலிச்சாமியார் காலடியில் தவமிருந்தார்.
  சமயச்சார்பற்ற நாடு என்னும் வகையில் இசுலாமியரான இவர் குடியரசுத் தலைவராக விளங்கினார். எனினும் உண்மைக்காரணம், இசுலாமியருக்கு நீதி மறைக்கப்படுவதை மறைக்கும் கேடயமாகவே இவர் பதவியமர்வு பயன்படுத்தப்பட்டது.
 தமிழ் மீனவர்கள் இன்னல்,   ஈழத்தமிழர்களின் உரிமை வேட்கை, தமிழ்நாட்டில் தமிழ் துரத்தப்படும் நிலைமை, மத்திய அரசின் தமிழ் ஒடுக்கப்படும் நிலைமை, தமிழர்க்குத் தேசிய மொழி தமிழ்தான் என்ற உண்மை முதலியன அவர் அறியாதனவல்ல! உலகெங்கும் உள்ள தமிழர்கள் அவருக்கு ஈழத்தமிழர் படும் கொடுந் துயர் துடைக்க உதவுமாறு வேண்டியும் பாராமுகமாகத்தான் இருந்துள்ளார். எளிமையானவர், இளைஞர்களிடையே நம்பிக்கைக்கனவுகளை விதைப்பவர், இந்தியாவை வல்லரசாக்கக் கனவு காணச் சொல்பவர் போன்ற புகழ்ப்போதைகளில் மூழ்கியவருக்கு உண்மையிலேயே இந்திய நாட்டின் முதல் குடிமகன் என்ற முறையில், தான் சார்ந்த குமுகாயத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்னும் கடமை உணர்வு அமிழ்ந்து போனதில் வியப்பில்லை.
  அவரைச் சந்திக்க விரும்பியவர்களுக்கெல்லாம் உடனே சந்திக்க இசைவு தந்து சந்தித்தார் எனப் பலரும் புகழ்கின்றனர். ஆனால், உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களின் உணர்வுமடல்கள் அவரது உள்ளத்தில் பதியாமல் போனதுதான் விந்தை. இதற்குச் சான்றாகப் பிற நாட்டவர் முறையீடுகள் வேண்டா, எங்கள் முறையீட்டைக் குறிப்பிட விரும்புகின்றேன்.
  மேனாள் குடியரசுத் தலைவரானபின்னர், பேரினப்படுகொலை நடந்த இலங்கைக்கு அவர் அவ்வப்பொழுது சென்று வருவதை நிறுத்திக் கொள்ளுமாறு வேண்டித் தமிழ் அமைப்புகள் சார்பில் அ்வரைச் சந்திக்க நாளும் இடமும் நேருமும் கேட்டிருந்தோம். ஒரு முறை சென்னை வருகையில் அண்ணாப் பல்கலைக்கழக விடுதியில் தங்குகிறார் என அறிந்து   மீ்ண்டும் இசைவு கேட்டோம். இசைவு தராவிட்டாலும் “உங்கள் மடல் கிடைத்தது. நேரம் கிடைக்கும் பொழுது சந்திக்கின்றேன்” என்றுகூடத் தெரிவிக்க வில்லை. சந்திக்கக்கூடாது என்ற முடிவிற்கு வந்த பின்னர்த் தவறாகத் தெரிவிக்கா அவர் நேர்மையைப் பாராட்டுகிறோம். அந்த மடல்(சனவரி 2012) பின்வருமாறு எழுதப்பட்டு அனுப்பப்பட்டது.
 மேதகு மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு வணக்கம்.
   தங்கள்பால் தமிழ் உலகமும், இளைஞர் உலகமும் பெரிய நம்பிக்கையுடன் உள்ளதை அறிவீர்கள். இளைஞர்களின் எழுச்சி நாயகனாகத் திகழும் தாங்கள், இனப் படுகொலை நடத்திய சிங்களத் தலைவர்களைச் சந்திக்கும் வகையில் இலங்கை செல்வது உலகு எங்கும் உள்ள தமிழர்களுக்கும், மனித நேயர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிப்பதாக உள்ளது.
  நீங்கள் இலங்கை செல்ல ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், இந்நாட்டின் முதல் குடிமகனாக இருந்த தமிழன் என்ற முறையில் அங்கே செல்வது அறமற்ற செயலாகும். தொழில் முறையில்கூடப் படப்பிடிப்பிற்காக இலங்கை செல்வோரைக் கலைஞர்களும், திரை உலகமும் புறகணித்து வருகின்ற இச்சூழலில் இந்த நாட்டின் முதல் குடிமகனாக இருந்த நீங்கள் அங்கு செல்வது முறைதானா? இதனால், உங்களது அனைத்து நிகழ்ச்சிகளையும் நாங்கள் புறக்கணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறோம். அதனைத் தவிர்க்கும் பொருட்டும், இலங்கையில் போர்க் கொடுமைகளால் தங்களின் இன்னுயிரை இழந்த தமிழர்களின் குடும்பத்தினரின் மன அமைதிக்காகவும் தாங்கள் இலங்கை செல்வதைக் கைவிடவேண்டுகிறோம்.
  தமிழர்களின் நலன் குறித்துப் பேசுவதாக நீங்கள் உங்களை அமைதிப்படுத்திக் கொண்டாலும் அது பொருந்தாது என்பதை அறிவீர்கள். சிங்களத் தலைவர்கள் ஒருதலையான செய்திகளைத்தான் உங்களிடம் கூறுவார்கள். அல்லது தமிழர்க்கு நன்மை செய்து அவர்களைக் காப்பாற்றி வருவதாக வழக்கம்போல் முழுப் பொய்யைக் கூறுவார்கள். நீங்கள் ஏதேனும் அறிவுரை கூறினாலும் ஒப்பிற்கு அதனை நடைமுறைப்டுத்துவாக வேண்டுமானால் கூறலாம். சில நடைமுறை மரபு கருதி உங்களாலும் ஓர் அளவிற்கு மேல் கூற முடியாத நிலையும் வரலாம்.
  உண்மையில் தமிழர் நலன் குறித்துப் பேச வாய்ப்பாகக் கருதித்தான் போவதாகக் கூற எண்ணினால் நீங்கள் அத்தகு கருத்துகளை இங்கிருந்தவாறு அறிக்கை வாயிலாகவோ, மடல் மூலமாகவோ தெரிவியுங்கள். எனவே அறிவுரை கூறுவதற்காகச் செல்வதாக எண்ணி, அங்குச் சென்று அவர்கள் கொடுமைகளுக்குத் துணை நிற்பதாக அவப்பெயர்களைச் சந்திக்க வேண்டியதில்லை. எனவே தாங்கள் இலங்கைப் பயணத்தை கைவிடுமாறு மன்றாடி வேண்டுகிறோம்.
  இது குறித்த உடன்பாட்டான மறுமொழியைத் தங்களிடம் இருந்து விரைவில் எதிர்பார்க்கிறோம்.
  தாங்கள் தங்களைச் சந்திக்கும் நல்வாய்ப்பை எங்களுக்கு நல்கினால் நீங்கள் குறிப்பிடும் நாளில் குறிப்பிடும் இடத்தில் குறிப்பிடும் நேரத்தில் சந்திக்கவும் ஆவலாக உள்ளோம். ஆதலின் அதற்கான இடம், நாள், நேரத்தைக் குறிப்பிட்டுச் சந்திப்பதற்கான இசைவை வழங்க வேண்டுகின்றோம்.
மிகவும் நன்றியுடனும் அன்புடனும்
தமிழ்க்காப்பு அமைப்புகள் சார்பில்
இலக்குவனார் திருவள்ளுவன்
தலைவர், தமிழ்க்காப்புக் கழகம், சென்னை.
  இதில் உள்ளவாறு காரணம் எதுவும் குறிப்பிடாமல், கனவுநாயகரைச் சந்திக்கத் துடிக்கிறோம் என்று எழுதியிருந்தால் உடனே அழைப்பு வந்திருக்கும். ஆனால், திட்டமிட்டு வாய்மூடியிருக்கும் பொழுது வாய்திறக்கச் சொன்னால் எப்படி சந்திக்க முன்வருவார்? அதனால்தான் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தவில்லை.
“நீங்கள் இராமேசுவரத்தில் பிறந்து வளர்ந்தவர், ஆதலால் மீனவர்களும் இலங்கைத் தமிழர்களும் பட்ட துன்பங்களை நேரில் கண்டு உணர்ந்து இருப்பீர்கள்” எனக் குறிப்பிட்டும் மடல் அனுப்பியிருந்தோம். யாவும், விழலுக்கு இறைத்த நீராயின.
  மீண்டும் குடியரசுத்தலைவர் பதவிக்கு நிற்குமாறு சில தரப்பார் வேண்டியபொழுதுகூட அனைவரும் ஆதரித்தால் போட்டியில்லாச் சூழலில் பதவியை ஏற்பதாகக் கூறினாரேயன்றி, என் இன மக்களுக்கும் என் தாய்மொழிக்கும் குரல் கொடுக்க இயலா இப்பதவி தேவையில்லை என்று சொல்லவில்லை. அத்தகைய உணர்வு இருந்திருந்தால்தானே அவ்வாறு சொல்லியிருப்பார்.
  இவரைப் பா.ச.க. குடியரசுத்தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுத்தபொழுதே இவர் அவர்களின் அடிமை என்பதால்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை நாம் உணராமல் அவரிடம் மனிதநேய அறத்தை எதிர்பார்த்தது தவறுதான்! பணிச்சூழலில், வாழ்க்கைச் சூழலில் மனித நேயத்துடன் பிறரை அணுகத் தெரிந்தவருக்கு நாட்டின்தலைமைப்பொறுப்பு ஏற்றுள்ள சூழலில்   தமிழ் மீனவர்களைக் காக்கவும் ஈழத்தமிழர்களின் உரிமைகளை மீட்கவும் மனித நேயத்துடன் நடந்து கொள்ளத் தெரியாமல் கண்மூடிக்கிடந்தவரை மனித நேயர் எனச் சொல்ல மனம் வரவில்லை!
  இவர் குடியரசுத் தலைவராக முன்மொழியப்பட்ட பொழுது நான் வரவேற்று எழுதிய மடல் தினமணியில் மடல் பகுதியில் நடுவே கட்டம் கட்டி வந்திருந்தது.
  இன்றைக்கு அதனையே மாற்றிப்பின்வருமாறு சொல்வதே பொருத்தாக இருக்கும்.
மேதகு அப்துல் கலாம்,
தமிழ் மீனவர்களின் உணர்வுகளை எடுத்துரைத்திருக்கலாம்!
சிங்களப் படையின் தாக்குதலைச் சிறிதேனும் தடுத்திருக்கலாம்!
ஈழத்தமிழர்களின் உரிமையை மத்திய அரசிற்கு உணர்த்தியிருக்கலாம்!
இலங்கை மண்ணிடன் மைந்தர்கள் தமிழர்கள் என்பதை உலக அரங்குகளில் வெளிப்படுத்தியிருக்கலாம்!
ஆசிரியர்களின்றிச் செயல்படாத் தமிழ்த்துறைகளைச் செயல்பட வைத்திருக்கலாம்!
பல்கலைக்கழகங்கள் தோறும் தமிழ்த்துறைகள் தொடங்க ஆவன செய்திருக்கலாம்!
அணுஉலையைத் தமிழ்நாட்டிலிருந்து அப்புதப்படுத்தியிருக்கலாம்!
சாணவளி(மீத்தேன்) நம்மைச் சாகடிக்கும் வழி என்பதைப் புரிய வைத்திருக்கலாம்!
தமிழுக்குச் சமஉரிமை கிடைக்க அறிவுறுத்தியிருக்கலாம்!
தொல்காப்பியத்தின் சிறப்பை உலகெங்கும் பரப்பியிருந்திருக்கலாம்!
திருக்குறளின் பொதுமையை அனைத்து நாடுகளும் அறியச் செய்திருக்கலாம்!
சங்கத்தமிழ் சால்புகளால் உலகம் செழிக்கச் செய்திருக்கலாம்!
செம்மொழித் தமிழின் தாய்மைநிலையைத் தரணியிலுள்ளோர் ஏற்கச் செய்திருக்கலாம்!
தமிழ்நாட்டில் தமிழர் முதன்மை பெற வழிகாட்டியிருக்கலாம்!
தமிழ்நாட்டில் தமிழ் தலைமை பெற ஆற்றுப்படுத்தியிருக்கலாம்!
உலகம் சுற்றி ஆசிரியரைப்போல் நடந்து கொண்டவர், இத் தொண்டுகளை ஆற்றியிருந்தால் அவரின் எப்பணியும் பாதித்திருக்கப் போவதில்லை!
  தனக்குப் பொறுப்பே இல்லாதவற்றைப் பேசியவர், தான் பிறந்த மண்ணிற்கு ஆற்ற வேண்டிய கடமைகளைப் பொறுப்புடன் ஆற்றியிருக்கலாம்!
எளியவராய்ப் பிறந்து ஏற்றம் பெற்றார் என வாழ்த்தினாலும்
தமிழ் வழியில் படித்துத் தலைமைப்பொறுப்பிற்கு வந்துள்ளார் எனப் போற்றினாலும்
தன்னை வளர்த்த தமிழுக்கும் தமிழன்னைக்கும் தமிழ்க்குலத்திற்கும் தொண்டாற்ற மறந்த கொடுமைகளை நம்மால் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை!
 அப்துல் கலாமைப் போற்றுவோரே அவரைப் போற்றுங்கள்! தவறில்லை!
ஆனால், அவர் செய்யத் தவறியவற்றை நீங்களாவது செய்ய வேண்டும் என உறுதி கொள்ளுங்கள்!
தமிழ்ஈழக் கனவை நனவாக்க இளைஞர்களும் இளம் பெண்களும் பொது மக்களும் எனப் பலவகையினர் உயிர் துறந்ததை எண்ணி அவர்களின் கனவை நனவாக்க வேண்டியது உங்கள் கடமை என உணருங்கள்! அப்துல்கலாம் புகழ் இருக்கும்வரை அவர்பற்றிய இகழுரைகளும் இல்லாமலிருக்க வேண்டுமானால், மேலே குறிப்பிட்ட குறைகளையெல்லாம் நீங்களாவது போக்குங்கள்!
அப்துல்கலாம் புகழ் ஓங்குக! அவர் செய்யத் தவறியவற்றை அவரது அன்பர்கள் செய்து முடிப்பார்களாக!
அகரமுதல 90, ஆடி 17, 2046 /ஆக. 02, 2015
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
feat-default