sevviyalilakkiyangalil-melaanmai-thalaippu4

expertise : தனித்துறைச் சிறப்பறிவுத்திறம், சிறப்புத்திறமை, சிறப்பறிவாளர் ஆய்வுரை, சிறப்பறிவுத் திறம் , சிறப்பறிவாளர் கருத்துரை, தொழில் நுட்ப அறிவு, வல்லமை, நிபுணத்துவம், சிறப்புத் திறன் எனப் பலவாகக் குறிப்பிடுகின்றனர். வல்லமை என்பதையே கையாளலாம்.
மருத்துவ வல்லமை – medical expertise
வல்லமை அறிவாற்றல்     – expertised knowledge
வல்லமை மேலாண்மை – expertise management
இவ்விடங்களில் வல்லுநர் அறிவாற்றல், வல்லுநர் மேலாண்மை எனக் குறி்க்கின்றனர். அது தவறு. வல்லமையுடையவர் வல்லுநர் ஆவார். இங்கே வல்லமைபற்றித்தான் குறிக்கப் பெறுகின்றன.
சிலர் இயக்குநர், வல்லுநர் முதலான சொற்களுக்குத் தந்நகரத்தைப் பயன்படுத்தாமல் றன்னகரத்தைப்பயன்படுத்தி,இயக்குனர், வல்லுனர் என்பனபோல் தவறாகக் குறிப்பிடுகின்றனர். செவ்வியல் இலக்கியங்களில் அரிநர், உறுநர், கழியுநர், குறுநர், குறைவேண்டுநர், செறிநர், செறுநர், தருநர், தாங்குநர், நசையுநர், புகழுநர், புரையுநர். பெருநீரோச்சுநர், பொருநர், முறைவேண்டுநர், வல்லுநர், வழங்குநர், வாழ்நர், வேண்டுநர், என வந்துள்ளவற்றை நோக்கினால் எப்படி எழுத வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வர்.
செவ்வியல் இலக்கியங்களில் உள்ள சொற்களை மீள்பயன்பாட்டு முறையிலோ மாற்றுருவாக்க முறையிலோ பயன்படுத்துவதே சிறந்தது. எடுத்துக்காட்டிற்கு ஒரு சொல்லைப் பற்றி மட்டும் பார்ப்போம். மேலாண்மையியலில் திறமைசார் சொல்லாகப் பயன்படுத்தப்படுவது கெப்பாசிட்டி/capacity என்பதாகும். இதனை எவ்வாறு சொல்லலாம் எனப் பார்ப்போம். பொதுவாக இச்சொல், கொள்திறம், உறிஞ்சு திறன், செயல் ஆற்றல், புரிந்துகொள்ளும் ஆற்றல், திறமை, அறிவுத் திறன், செயல்நிலை, இயல் திறம். முறைமை, சட்டத்தகுதி, இயன்ற உச்ச வேலை அளவு, மின் ஏற்றம் மின் அழுத்தம் ஆகியவற்றின் விகிதம் எனப் பலவற்றையும் குறிக்கும். இங்கே, குறிப்பிட்ட காலத்தில் ஆள் அல்லது அமைப்பின் தனித்திறமை அல்லது தரவுவளம் அளவிலும் தரத்திலும் அறியப்படுவதைக் குறிப்பது. கெப்பாசிட்டி/capacity என்பதற்கு நாம், கொள்கலனின் கொள்ளளவை இயல்பாகக் குறிப்பிடுவோம். கொள்(179 இடங்கள்), கொள்கலன்(2), ஆகிய சொற்களும் கொள்வது தொடர்பான இருபதுக்கும் மேற்பட்ட சொற்களும் சங்க இலக்கியங்களில் உள்ளன. திறம்(80), திறன் (31) சொற்களும் சங்க இலக்கியங்களில் உள்ளன. எனவே, தமிழ்-தமிழ் அகராதியில் குறிப்பிட்டுள்ள கொள்திறம் – capacity என்பது ஏற்றதாகவே உள்ளது எனலாம். இதனடிப்படையிலான பிற சொற்களை மேலாண்மையியலுக்கு ஏற்றவாறு நாம் பார்ப்போம்.
கொள்திறப் பகுப்பாய்வு – capacity analysis
கொள்திற உறுதிப்பாடு – capacity available to promise
கொள்திறக் கட்டுமானம் – capacity building
(மேலாண்மையியலில் இவ்விடத்தில், கட்டடம் என்று சொல்வதைவிடக் கட்டுமானம் என்பதுதான் ஏற்றதாக இருக்கும்.
ஈட்டம் (acquisition), சலுகைகள், ஊக்குவிப்புகள் முதலான தூண்டுகைகள் (incentives), தொழில் நுட்பம், பயிற்சி ஆகியவற்றின் மூலம் அமைப்பின்   வினையறிவு, பொருளாக்கம் அல்லது விளைவளவின்(output) விகிதம், மேலாண்மை, திறமைகள், பிற திறன்கள் ஆகியவற்றைத் திட்டமிட்டு மேம்படுத்தலாகிய வினைமானத்தைக் குறிக்கும். வினைமானம் என்றால் தவறான பொருள் என நேர்பொருளாகப் பார்ப்போர் கருதுவர். எனவே, கட்டுமானம் என்றே சொல்லலாம்.)
கொள்திறக் கட்டுப்பாடு – capacity control (மறைவிடர் கூறுகள் /risk factors தொடர்பான மேலாண்மைக் கட்டுப்பாடு)
கொள்திறக் கட்டுப்பாட்டுக் கட்டணம் – capacity controlled fare (வானூர்தி இருக்ககைளின் ஏற்ற இறக்கக் கட்டணத்தைக் குறி்ப்பது)
கொள்திறச் செலவு – capacity cost
கொள்திறக் காரணி – capacity factor
கொள்திற மேலாண்மை – capacity management
தரப்பார் கொள்திறம் – capacity of parties (கட்சிகள் என்று குறிப்பிடின் அரசியல் கட்சிகள் என எண்ணுவர்.)
கொள்திற மேற்செலவினம் – capacity overhead expense
கொள்திறத் திட்டமிடல் – capacity planning
கொள்திற வீதஅறுதிப்பாடு – capacity rating
கொள்திறத்தேவைத் திட்டமிடல் capacity requirements planning (CRP)
கொள்திறப் பயன்வீதம் capacity usage ratio
கொள்திறப்பயன் மாறுபாடு capacity usage variance
கொள்திறப் பயன்பாடு capacity utilization
கொள்திறப்பயன்பாட்டு விலை capacity utilization rate
சொற்பொருள் மாற்றங்களைச் சொற்பொருள் விரிவு, சொற்பொருள் சுருங்கல், சொற்பொருள் உயர்வு, சொற்பொருள் இழிபு, சொற்பொருள் மாற்றம் என ஐவகையாகப் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் விளக்குகிறார். இவையெல்லாம், காலப்போக்கிலும் பயன்பாட்டு அடிப்படையிலும் இயல்பாக அமைவன ஆகும். ஆனால், நாம் இப்பொழுது பழஞ்சொற்களை மறந்துவிடுகின்ற காரணத்தால் அவற்றின் பொருள்களை உணரா இயலாமையால், அயல்மொழி ஈடுபாட்டின் அறியாமையால், தமிழ்ச்சொற்கள் பயன்பாட்டை அழித்துக் கொண்டு வருகிறோம். இப்பொழுது ஓரளவேனும் அயற்சொற்களைக் களைய வேண்டும் என்ற உணர்வு வளர்ந்து வருகிறது. அதற்கு நாம், செவ்வியல் இலக்கியங்களைப் படித்து பழஞ்சொற்களின் மீள்பயன்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.
சென்றிடுவீர் எட்டுத் திக்கும்     
கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
என்னும் பாரதியாரின் கட்டளையை நிறைவேற்ற கலைச்சொற்களைப் பெருக்க வேண்டும்.
   சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
   வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து (திருக்குறள் 645) என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கட்டளையைக், கலைச்சொற்களை வரையறுக்கவும் இலக்கணமாகக் கொண்டு ஏற்ற சொற்களை உருவாக்க வேண்டும். பாவேந்தர் பாரதிதாசன் அறிவுறுத்தியதுபோல் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்து தமிழுக்குத் தொண்டு செய்ய வேண்டும்.; கலைச்சொல்லாக்க உருவாக்கத் தொண்டு புரிதல் வேண்டும். நாம் இதில் எட்ட வேண்டிய இலக்கு வெகுதொலைவில் உள்ளது. மேலாண்மைத் துறையைப் பொருத்தவரை முதல் படியில்தான் காலடி வைக்கத் தொடங்கியுள்ளோம். எனவே, தமிழ்த்துறையினரும் மேலாண்மைத் துறையினரும் இணைந்து புதிய கலைச் சொற்களை உருவாக்க வேண்டும். அவற்றைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் வகையில் கட்டுரைகளும் நூல்களும் படைக்க வேண்டும். அவ்வுணர்விற்குத் தூண்டுதல்தான் இதுவரை பார்த்த செய்திகள்.
இச்சிறுபொறி
கலைச்சொல் ஆர்வக் கனலைப் பெருக்கட்டும்!
தமிழ் என்றென்றும் வளரட்டும்! வாழட்டும்! வெல்லட்டும்!
இலக்குவனார் திருவள்ளுவன்
ilakkuvanar thiruvalluvan