Monday, August 3, 2015

இறையாண்மை என்றால் இதுதான் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்

iraiyaanmai_endral_thalaippu
  நிலப்புற அரசுகளும் (States on exile)  இறையாண்மை உள்ளனவாகக் கருதப்படுகின்றன. சான்றாக இரண்டாம் உலகப்போரின் பொழுது நார்வே, நெதர்லாந்து, செக்கோசுலோவேகியா முதலான நாடுகள் அயலவர் ஆளுகைக்கு உட்பட்டிருப்பினும் இறையாண்மை மிக்கப் புற அரசுகளாக அல்லது புவிசாரா அரசுகளாகக் கருதப்பட்டன.  அயலாட்சி நீங்கியதும் புவிசார்இறையாண்மை மிக்க அரசுகளாகக் கருதப்பட்டன. 1990-91 இல் ஈராக் போரின்பொழுது குவைத்து அரசிற்குப் புவிசாரா இறையாண்மை உள்ளதாகக் கருதப்பட்டது. இவற்றின் அடிப்படையிலும் தமிழ் ஈழம் இறையாண்மை மிக்க அரசாகத் திகழ்ந்தது. இப்பொழுது நிலப்புறத் தமிழ்ஈழம் (Eezham on exile) அமைக்கப்பட்டுள்ளதும் இறையாண்மை மிக்கதாகக் கருதப்பட வேண்டியுள்ளது. இவற்றின் அடிப்படையில் சிங்கள இறையாண்மைக்கு எதிரான பேச்சுகளை ஆராய வேண்டும்.
  ஒரு நாட்டின் இறையாண்மை அந்நாட்டு மக்களுக்கு எதிராகவோ நம் நாட்டிற்கு எதிராகவோ பிற நாடு  அல்லது பிற நாடுகளுக்கு எதிராகவோ அமைந்தது எனில் அது குறித்து யாரும் பேசலாம் அல்லது எதிராகச் செயல்படலாம் என்னும் பொழுது அந்த இறையாண்மை மீறலால் துன்பங்களுக்கு உள்ளாவோர் அந்த அயல்நாட்டு இறையாண்மைக்கு எதிராகப் பேசுவது குற்றமே ஆகாது. மாறாகத்,  தன் நாட்டுமக்களின் உணர்விற்கு எதிராக அந்த நாட்டு அரசின் இறையாண்மையைக் காக்க முற்படும் அரசின் செயல்பாடுதான் குற்றமாகிறது. தமிழர்க்கென இறையாண்மை மிக்க அரசு இருந்தது எனில், தமிழர் படுகொலைகள் நடைபெற்றிருக்காது. தமிழ் மீனவனைத் தாக்கினால் சிங்கள மாணவன் தாக்கப்படுவான் எனப் பேசுவதற்கே தேவையில்லாமல் அரசே உரிய நடவடிக்கை எடுத்திருக்கும். இறையாண்மை மிக்க அரசிற்கு எதிராகச் சிங்களம் வாலாட்டாது. இந்தியாவும் இறையாண்மை மிக்க நாடுதானே! அப்பொழுதும் சிங்களம் அஞ்சவில்லையே என எண்ணலாம். இந்திய அரசு என்பது தமிழக நலனுக்கு எதிராகவே செயல்படுகிறது என்பது உலகறிந்த உண்மை. எனவே, ஒருவருக்கொருவர் இணைந்து செயலாற்றும் பொழுது இந்திய இறையாண்மை குறித்துச் சிங்கள இறையாண்மைக்குக் கவலை இல்லை. செம்மொழிச் சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள், இந்திய அரசு இலங்கையரசின் நட்புக்காகத் தமிழர்களைப் பலி கொடுத்து விடுவார்களோ என்று அஞ்ச வேண்டியுள்ளது என்று 40 ஆண்டுகளுக்கு முன்னரே அச்சத்தைத் தெரிவித்துள்ளார் எனில் இந்தியா எப்பொழுதும் தமிழர் நலனில் கருத்து செலுத்தாமல் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால், நமக்கென இறையாண்மை மிக்க அரசு இருந்தது எனில், இத்தகைய அவலங்கள் ஏற்பட்டிருக்காது. போர்க்குற்றங்களும் படுகொலைகளும் நடைபெற்றிருக்காது, சிங்கள அரசின் கொடுங்குற்றச் செயல்களை இறையாண்மை மிக்க தமிழக அரசு, தானே உலக நாடுகளின் கவனத்திற்குக் கொண்டு வரும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கும். அத்தகைய சூழலில் இந்திய இறையாண்மை சிங்கள இறையாண்மைக்கு வால்பிடித்து அலையும் நிலையும் ஏற்பட்டிருக்காது.
  இத்தகைய குற்றச் செயல் நிகழ்வுகளுக்கு இந்திய இறையாண்மை உடன்படுவதன் காரணம் என்ன? இறையாண்மை மிக்க அரசுகளின் கூட்டிணைவாக ஒன்றிய அரசு அமையாமல் தனி வல்லரசாக நடைமுறையில் மாறியுள்ளதே  காரணம் என்பது எளிதில் யாவர்க்கும் புரியும். எனவே நம் நலன் காக்க நாம் இறையாண்மை மிக்க அரசாகத் தமிழக அரசு விளங்க வேண்டும் என வேண்டுவது முற்றிலும் அறவழிப்பட்டதே. இந்தியா ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பொழுதே செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் 1942 இல் சங்க இலக்கியம் இதழ் மூலம் பின்வருமாறு வினாக்கணை தொடுத்தார்.
“தமிழா சிந்தனை செய்!
வீரத்தமிழா வீறிட்டெழு!
முன்னை நிலையை உன்னிப் பார்!
நாடு – பரந்த தமிழகம் குறைந்ததேன்?
மொழி – உலகாண்ட உன் மொழியை ஒடுக்குவதேன்?
வீரம் – இமயம் கொண்ட ஏற்றம் எங்கே?
ஆட்சி – பாவலனைப் போற்றிய காவலனெங்கே?
வாணிகம் – கப்பலோட்டிய கண்ணியம் எங்கே?
கொடை – பெருந்சோறளித்த பெருமைதான் எங்கே?
தாய்மொழி உயரத் தாய்நாடு உயருமே!”
  இவ்வினாக்களுக்கெல்லாம் தீர்வு வேண்டுமெனில் தமிழகம் இறையாண்மை மிக்க அரசாகத் திகழ்தல் வேண்டும்.கோட்டையில் இந்தியத் தேசியக்கொடியேற்றும் உரிமையைத்தான் முதல்வரால் பெற முடிந்ததே தவிர, அவர் வேண்டியவாறு தமிழக அரசிற்குத் தனிக் கொடியைப் பெற இயலவில்லை. காவல் துறை போன்ற பல துறைகளுக்கெனத் தனித் தனிக் கொடிகள் இருப்பினும் மாநில அரசுகளுக்குத் தனிக் கொடி இருப்பதை இந்திய இறையாண்மை விரும்பவில்லை. நாம், இந்திய இறையாண்மையில் சிக்கியுள்ளதால் இந்தி மொழித் திணிப்பிற்கும் சமசுகிருதமயமாக்கத்திற்கும் ஆளாகி அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்திய கட்சி ஆட்சிக்கட்டிலில் ஏறியும் கூட அதனைச் செயல்படுத்த முடியவில்லை. தமிழ்நாட்டில் தமிழர்கள் தமிழர்களால் கட்டப்பெற்ற தமிழ்க்கடவுள்களுக்கான கோயில்களில் தங்கள் மொழியாகிய தமிழில் வழிபாடு நடத்த முடியவில்லை. ஓர் அரசு ஒரு நாட்டின்மீது நடைமுறை ஆட்சி அதிகாரத்தைச் செலுத்துகிறது; ஆனால் அந்த நாட்டின் அரசுடன் இணைந்து செயல்படவில்லை எனில் அந்த அரசு அயலக இறையாண்மை உடையதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதன் அடிப்படையில் பார்த்தால் இந்திய இறையாண்மை என்பது தமிழகத்திற்கு(ம் பிற மாநிலங்களுக்கும்) அயலக இறையாண்மையாக விளங்குகிறது எனலாம்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்


No comments:

Post a Comment

Followers

Blog Archive