Saturday, March 21, 2015

செம்மொழி விருதாளர்களுக்குப் பாராட்டும் மத்திய அரசிற்கும் தமிழ்ப்பேராசிரியர்களுக்கும் கண்டனமும்!

semmozhi-awardees

செம்மொழி விருதாளர்களுக்குப் பாராட்டும்

மத்திய அரசிற்கும் தமிழ்ப்பேராசிரியர்களுக்கும் கண்டனமும்!


  செம்மொழித்தமிழுக்கான விருதுகள் 2011-2012, 2012-2013 ஆகிய ஈராண்டுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
   2011-12-ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது முனைவர் செ.வை. சண்முகத்துக்கும், குறள் பீட விருது செருமன் நாட்டைச் சேர்ந்த இவா மரியா வில்டெனுக்கும், இளம் தமிழ் அறிஞர்களுக்கான விருதுகள் கே. ஐயப்பன், எழில் வசந்தன், கே. சவகர் ஆகியோருக்கும் குடியரசுத் தலைவர் வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளனர். .
  இதேபோல, 2012-13-ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது “தினமலர்’ ஆசிரியர் முனைவர் இரா. கிருட்டிணமூர்த்திக்கும், இளம் தமிழ் அறிஞர்களுக்கான விருதுகள் ஏ. சதீசு, ஆர். வெங்கடேசன், பி. செய் கணேசு, எம்.ஆர். தேவகி, யு. அலி பாவா ஆகியோருக்கும் குடியரசுத் தலைவர் வழங்கவிருக்கிறார்’ என்றும் அறிவித்துள்ளனர்.
  விருதாளர்கள் அனைவருக்கும் அகரமுதல இதழின் பாராட்டுகள்! விருதாளர்கள் அனைவரும் தங்கள் பெயரின் முதல்எழுத்தைத் தமிழில் குறிப்பிட்டும், தமிழ் எழுத்துகளில் பெயரைக் குறிப்பிட்டும் அயற்சொற்களும் அயலெழுத்துகளும் கலக்காமல் தமிழில் எழுதியும் தமிழ் நலம் சார்ந்தபடைப்புகளை வெளியிட்டும் விருதிற்குப் பெருமை சேர்க்கவும் வேண்டுகிறோம்.
  இதே நேரத்தில் தமிழுக்கு உரிய மதிப்பு தராத மத்திய அரசையும் அரசுகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டி அறிவுறுத்தும் துணிவற்ற முதுகெலும்பில்லாத தமிழாசிரியர் கூட்டத்தையும் தமிழ் சார்ந்த துறையினரையும் கண்டிக்கிறோம்.
 மத்திய அரசின தமிழ்ப்பகை உணர்வை எடுத்துக்காட்டப் பல நிகழ்வுகள் இருக்கின்றன. இருப்பினும் இங்கே செம்மொழி விருதுகள் தொடர்பாகவே நாம் குற்றம் சாட்ட விரும்புகிறோம்.
    2004 ஆம் ஆண்டுதான் உயர்தனிச் செம்மொழி என உலக அறிஞர்களால் போற்றப்படும் தமிழுக்கு இந்திய அரசு அறிந்தேற்பு வழங்கியது. அவ்வாண்டு முதலே சமற்கிருதத்திற்குச் செம்மொழி என்ற போர்வையில் விருதுகள் வழங்கும் இந்திய அரசு செந்தமிழுக்கும் விருதுகள் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், 2008-2009 ஆம் ஆண்டு முதல்தான் வழங்கிவருகின்றது. (இது குறித்து முன் வெளிவந்த “யாருக்கும் வெட்கமில்லை!” (நட்பு இணைய இதழ்), “இந்தித்திணிப்பில் உறுதி கொண்ட மத்திய அரசும் ஆரவார முழக்கங்களால் தடுமாறும் தமிழகக் கட்சிகளும்”, என்னும் கட்டுரைகளைத் தனியே காண்க.) இருப்பினும் அறிவிக்கப்பட்ட விருதுகள் எண்ணிக்கையில் விருதுகள் வழங்குவதில்லை. தமிழுக்குக் குறள்பீட விருதுகள் இரண்டு வழங்கப் பெற வேண்டும். ஆனால் ஒரு விருது வழங்குவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது. சமற்கிருதத்திற்கு இரு விருதுகள் வழங்கும் வரை இந்த அவலநிலை தொடரும். எனினும் இவ்வாண்டு அறிவிக்கப்பட்ட 20012-2013 ஆண்டிற்கான குறள்பீட விருதுஒன்றுகூட வழங்கப் பெறவில்லை.
  2011-12 ஆம் ஆண்டிற்கு 5 இளம் ஆய்வாளர்களுக்கு விருதுகள் வழங்கப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், மூவருக்குத்தான் வழங்கப்பெற்றுள்ளது.
   இவற்றுக்கெல்லாம் அடிப்படைக்காரணம் தமிழறிஞர்களை மதிக்காத மத்திய அரசுதான். எந்தக் குழுவாக இருந்தாலும் தமிழறிஞர்களை நியமிப்பதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளது போலும். விருதுகளுக்கான தெரிவுக் குழுத் தலைவர் தமிழறிஞரல்லர். குழு உறுப்பினர்களும் தமிழைச்சிதைத்து எழுதுவதில் பெருமைகாணும் கதையாசிரியர்கள். கதையாசிரியர்களுக்கு விருது வழங்குவதாயின் இவர்களை உறுப்பினராக அமர்த்தலாம். செம்மொழிக்கு மாறான இவர்களை அமர்த்தினால் எங்ஙனம் தேர்வு செய்ய இயலும்? விண்ணப்பங்கள் வரவில்லை என்பதால் தெரிவு செய்ய முடியவில்லை எனத் தெரிவித்ததாகக்கேள்விப்பட்டோம்.   தமிழறிஞர்களாயின் இளம் ஆய்வாளர்களை அவர்களே அறிந்திருப்பர்.
  அதுபோல் வெளிநாட்டவர் ஒருவருக்கும் வெளிநாடுவாழ் இந்தியருக்குமா உருபாய் 5.00 இலட்சம் விருதுத் தொகை உடைய குறள்பீட விருதிற்குத் தக்கவர்களைத் தெரிந்தெடுக்கும் தகுதியில்லாதவர்களை ஏன் குழுவில் சேர்க்க வேண்டும்?   வெளிநாட்டவர்க்கு விருதுகள் வழங்குவதன் மூலம் தமிழுக்கான சிறப்பை வெளிநாட்டவர்கள் உணரவும் தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபடவும் வாய்ப்பாக அமையும்.வெளிநாடு வாழ் தமிழறிஞர்கள் பலர் இருப்பினும் இருவர் அவர்களில் முந்தி நிற்கின்றனர். தமிழ் இலக்கியங்களைப் பிற நாட்டார்   போற்றும்வண்ணம் சங்கத் தமிழ் மொழிபெயர்ப்பு கணிணிவழித் தமிழ் வளர்ச்சி,   என மிகுதியாகக் கூறலாம். அவர்கள்தாம் பேராசிரியர் முனைவர் இராசம் இராமமூர்த்தி அவர்களும் வைதேகி எர்பர்ட்டு அவர்களும் ஆவர். விண்ணப்ப அடிப்படையில்தான் விருதுகள் வழங்குதல் என்றால்   தகுதியற்றவர்களும் விருதுப்பட்டியலில் இடம் பெறுவர். விருதுகள் பெறுவதற்குரிய தகுதியாளர்கள் இருப்பினும் அதற்கான ஒதுக்கீடு இருப்பினும் தெரிவு செய்யும் தகைமை இல்லாதவர்களைத் தெரிவுக் குழுவில் அமர்த்திய மத்திய அரசிற்குக் கண்டனம் தெரிவிக்கிறோம். இதே போல், தனக்காகப் பரிசு வழங்கப்போகிறார்கள் என எண்ணி, உரிய விருதுகளை வழங்கா மத்திய அரசைக் கண்டிக்கும் துணிவில்லாத் தமிழாசிரியக் கூட்டத்தினரையும் கண்டிக்கிறோம்.   “தமிழால் வயிற்றை நிரப்பினால் போதும் வளர்தமிழ் மேம்பாட்டிற்குப் பாடுபட வேண்டா என இருப்பவர்களே தமிழ்ப்பேராசிரியர்கள்” என்னும் அவப்பெயரை நீக்க வேண்டாவா?
சோற்றுக்கென் றொறுபுலவர் தமிழ்எதிர்ப்பார் அடிவீழ்வார்! தொகையாம் செல்வப் பேற்றுக்கென் றொருபுலவர் சாத்திரமும் தமிழ்என்றே பேசி நிற்பார்!
நேற்றுச்சென் றார்நெறியே நாம்செல்வோம் எனஒருவர் நிகழ்த்தா நிற்பார்!
காற்றிற்போம் பதராகக் காட்சியளிக் கின்றார்கள் புலவர் சில்லோர்! (தமிழியக்கம்) என்னும் பாவேந்தர் பாரதிதாசன் வருத்தத்ததைப்போக்கும் வகையில் தமிழாசிரியர்கள் செயல்படும் நாளே தமிழர்க்கும் தமிழுக்கும் பொன்னாளாகும் என்பதை உணரவேண்டாவா?
  ஆண்டுதோறும் விருதுத்தொகை உரூ 50,000 வழங்கும் வாழ்நாள் செம்மொழி விருது சமற்கிருதத்திற்குப் பதினைவருக்கும் பாலி/பிராகிருதத்திற்கு ஒருவருக்கும் அரபிக்கு மூவருக்கும் பெர்சியனுக்கு மூவருக்கும் என வழங்கப்படும் பொழுது தமிழுக்கு வழங்காதது குறித்துக் கிளர்ந்தெழ வேண்டாவா?
  செம்மொழி விருது ஆண்டுதோறும் சமற்கிருதத்திற்கு 28 வழங்கப்படுகையில் தமிழுக்கு ஐந்து அல்லது ஆறு என வழங்குவது தமிழையும் தமிழறிஞர்களையும் இழிவுபடுத்துவதுதானே! மேலும் தரப்படும் விருதுகளையும் ஆண்டுதோறும் அறிவிப்பதில்லை! எனவே, மத்திய அரசு இதுவரை வழங்கா விருது எண்ணிக்கையையும் உள்ளடக்கி விருதுகளை வழங்கவும் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கவும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகிறோம்.
  அதுபோல் நம் நாட்டில் உயரிய விருதுஎன்பது பத்துஇலட்சம் உரூபாய் பரிசுத்தொகை உள்ள கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி விருது என்பதாகும். 2009 ஆம் ஆண்டு மட்டும் இவ்விருது வழங்கப்பெற்றுள்ளது. அரசியல் காணரங்களால் இவ்விருது குறித்துக் கருதிப் பார்க்கவே நிறுவனம் தயங்குகிறது போலும். ஆட்சியாளர்கள் தாங்கள் ஆட்சியில் இருக்கும் பொழுது தங்கள்பெயர்களைச் சூட்டுவதில் மகிழ்கிறார்கள். ஆனால் ஆட்சி மாற்றத்திற்குப்பின் அப்பெயர் தூக்கி எறியப்படும் என்பதை உணரத் தவறுவது ஏன்? எனவே, பெயர் சூட்டுவதில் வாழுநர் பெயரைத் தவிர்ப்பதே நல்லது என உணர வேண்டும். பெயர்தான் சிக்கல் எனில்   பேரறிஞர் அண்ணா அல்லது வேறு பெயரில் வழங்குமாறு கலைஞரையே கேட்டு முடிவெடுக்கலாம். இதனால் உயரிய விருது செயல்பாடின்றி இருப்பதை உரியவர்கள் உணர வேண்டும். நிறுவனத்திற்கும் இவ்விருது வழங்கலாம் என விதிமுறை இருப்பதால் மதுரைத் தமிழ்ச்சங்கம், கரந்தைத்தமிழ்ச்சங்கம் அல்லது தாய்த்தமிழ்க்கல்விக்கூடங்கள் அல்லது வெளிநாடுகளில் தமிழ் கற்பித்து வரும் அமைப்புகளுக்கு வழங்கலாம். தமிழ்நாட்டில் மட்டும்தான் தமிழோடு கட்சி அரசியலையும் கலந்து அவலநிலையை உண்டாக்குகின்றனர். அதனை மாற்றும் வகையில் பத்து இலட்சம் உரூபாய் விருதினைத் தவறாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழை யுயர்த்தினர் தாமுயர் வுற்றார்
என்ற சொல் நாட்டினால், இறவா நற்புகழ்
நன்று வாய்ந்திடும்
 -பாவேந்தர் பாரதிதாசன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை   http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader.png
அகரமுதல 70 நாள் பங்குனி 01, 2046 / மார்ச்சு 15,2015


No comments:

Post a Comment

Followers

Blog Archive