Monday, November 17, 2014

‘இந்தியால் தமிழ் கெடும்’ என உணர்த்திய இலக்குவனார்


Author

இலக்குவனார் திருவள்ளுவன் 

திங்கள், 17 நவம்பர் 2014 (18:18 IST)
(கார்த்திகை 1 / நவம்பர் 17ஆம் நாள், தமிழறிஞர் இலக்குவனார் பிறந்த நாள்)
 
பழைய இலக்கியங்களை ஏட்டிலிருந்து அச்சிற்குக் கொண்டு வந்தது, உரை எழுதியது, பிற மொழிச் சொற்களை நீக்கியது எனப் பல்வேறு செயல்பாடுகளால் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர்கள் தமிழுக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தினர். இவர்களுள் பலர் எழுத்தால் தொண்டாற்றினர்; சிலர் பேச்சால் தொண்டாற்றினர்; எழுத்தாலும் பேச்சாலும் தொண்டாற்றியவர்களும் சிலர் இருந்தனர். ஆனால், எழுத்தாலும் பேச்சாலும் மட்டுமன்றி, களத்திலும் நின்று தமிழ் காக்கப் போராடியவர், தமிழுக்காகச் சிறை வாழ்வை மேற்கொண்டவர், செந்தமிழ் மாமணி இலக்குவனார்! இச் சிறப்பே தமிழ்ப் பேராசிரியர் சி.இலக்குவனாரைத் தமிழ்ப் போராளியாக உலகம் போற்றக் காரணமாய் அமைகிறது.
 
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தொல்காப்பியத்தை எளிய தமிழில் மக்களிடையே பரப்பினார். சிலர் தவறான கண்கொண்டு தங்கள் விருப்பம் போல் தொல்காப்பியருக்கு எதிரான கருத்துகளைத் தொல்காப்பியத்திற்கு உரையாக அளித்தனர். தொல்காப்பியரைத் தொல்காப்பியர் கண்கொண்டு நோக்கி, உண்மையான எளிய விளக்கம் அளித்தார். தொல்காப்பியர் கால ஆராய்ச்சி, அவர்காலச் சொற்கள் குறித்த ஆராய்ச்சி, அவருக்கு முன்பிருந்த தமிழ் இலக்கியச் சிறப்பு என அறிவியல் ஆய்வு முறையில் ஆராய்ந்து மக்களிடையே பரப்பினார். இந்திய வரலாறு படிப்போர் தொல்காப்பியம் படிக்க வேண்டும்; அது வாழ்வியல் நூல் என்றார். தொல்காப்பியம் பற்றிய கட்டுரைகளையும் விளக்கவுரைகளையும் அளித்தார். தொல்காப்பிய ஆராய்ச்சி நூலை எழுதி வெளியிட்டார். தொல்காப்பியருக்கு முன்னரும் தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் இருந்தன என்பதை வெளிப்படுத்தினார். தொல்காப்பியத்தை உலகம் அறிய வேண்டும் என விரும்பினார். தாமே அனைவருக்கும் புரியும் வகையில் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதற்கான விளக்க உரைகளையும் ஆங்கிலத்தில் அளித்தார். எனவே, உலக அறிஞர்கள் தொல்காப்பியத்தின் சிறப்பையும் தமிழின் பெருமையையும் உணரலாயினர். தமிழ்ப் புலவர்களே அறியாதிருந்த தொல்காப்பியத்தை மக்கள் இலக்கியமாக மாற்றினார்.
 
இலக்கியம் என்றாலே புலவர்களுக்கு உரியது என்ற தவறான எண்ணம் இருந்தது. அந்த எண்ணத்தை மாற்றிச் சங்க இலக்கியங்கள், மக்களுக்கு உரியன என்பதை உணர்த்தினார். சொற்பொழிவுகள் மூலமும் படைப்புகள் மூலமும் சங்க இலக்கியங்களின் சிறப்பை நாட்டினருக்கு எடுத்துரைத்தார். நாட்டில் முதல் முறையாக அஞ்சல் வழிக் கல்வியை ஏற்படுத்தி அதன் மூலம் சங்க இலக்கியங்களைப் பரப்பினார். சங்க இலக்கியங்களை உலகறியச் செய்ய வேண்டும் என்பதற்கே ‘சங்க இலக்கியம்’ என்றும் ‘இலக்கியம்’ என்றும் இதழ்கள் நடத்தினார். 
 
அறிஞர் வை.தாமோதரனாரும் அறிஞர் உ.வே.சா அவர்களும் இடர்ப்பட்டு ஏட்டில் இருந்து அச்சிற்குக் கொண்டு வந்த சங்க இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தார். அரும்பாடுபட்ட அறிஞர்களின் உழைப்பு, இதனால் மக்களை அடைந்து உரிய பயனைப் பெற்றது. பாடத் திட்டங்களில் தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியங்களையும் சேர்த்து, வளரும் மாணவத் தலைமுறையினர் அவற்றை அறியச் செய்தார்.

 
மாணவப் பருவத்திலேயே திருக்குறள் முழுமையும் கற்றவர், இலக்குவனார். கற்றதுடன் இல்லாமல் 'குறள்நெறி ஓங்கின் குடியரசோங்கும்'  எனப் பரப்பினார். 'குறள்நெறி' எனத் தமிழிலும் ஆங்கிலத்திலும் இதழ்கள் நடத்தினார். திருக்குறளுக்கு எளிய பொழிப்புரை வழங்கினார். 'அமைச்சர் யார்', 'எல்லாரும் இந்நாட்டு  மன்னர்', 'வள்ளுவர் கண்ட இல்லறம்', 'வள்ளுவர் வகுத்த அரசியல்' என்பன போன்று வெவ்வேறு தலைப்புகளில் திருக்குறள் அதிகாரங்களைப் பகுத்து மக்களிடையே குறள் நெறியைப் பரப்பினார். 
 
'பழந்தமிழ்' நூல் மூலம் தமிழின் சிறப்பை நாம் உணரச் செய்தார். “தமிழே உலக மொழிகளின் தாய்” என ஆராய்ந்து உரைத்தார். பரிதிமாற் கலைஞர் வழியில் “தமிழ் உயர்தனிச் செம்மொழி” என்றார். மறைமலை அடிகள் வழியில் தனித் தமிழைப் போற்றினார். தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் வழியில் எளிய தமிழில் நூல்கள் எழுதினார். சமசுகிருதச் சொற்கள் எனப் பரப்பப்பட்ட சொற்களை எல்லாம் தமிழ்ச்சொற்களே என நிறுவினார்.
 
திறமான புலமை எனில் வெளிநாட்டோர்
அதை வணக்கம் செய்தல் வேண்டும் 
 
என்னும் பாரதியின் பாடலைக் கட்டளையாக ஏற்றார். பிற மொழியினரும் செந்தமிழின் சிறப்பை உணர வேண்டும் என எண்ணினார். எனவே, தமிழ் மொழி குறித்து ஆங்கிலத்திலும் தொல்காப்பிய மொழிபெயர்ப்புப் போல் வேறு பல நூல்கள் எழுதி வெளியிட்டார்.
 
சேமம் உற வேண்டும் எனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!
 
என்னும் பாரதியின் வாக்கை நடைமுறைப்படுத்த எண்ணினார்.
 
“தமிழ்நாட்டின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை” என்ற பாரதிதாசன் கவலையைப் போக்க எண்ணினார்.
 
தான் வாழ்ந்த ஊர்கள்தோறும் தமிழ் அமைப்புகள் ஏற்படுத்தி அதன் மூலம் தமிழ் வகுப்புகள் நடத்தினார். தமிழ்ப் பெயர்கள் சூட்டவும் கடைப்பெயர்கள் தமிழில் இருக்கவும் ஊர்வலமாகச் சென்று வேண்டுகோள் விடுத்துச் செயற்படுத்தினார்.
 
‘தமிழர்க்குத் தேசிய மொழி தமிழே’ எனவும் ‘இந்தியால் தமிழ் கெடும்’ எனவும் உணர்த்தினார். மொழி, இனச் சமஉரிமை உள்ள கூட்டரசு அமைப்பாக நம் நாடு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். எனவே மத்திய அரசு இந்தியைத் திணித்த பொழுது தமிழ் மக்களையும் மாணவர்களையும் இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபடச் செய்தார். தான் கைது செய்யப்படுவோம் என அறிந்த பொழுது, “யாரேனும் தமிழுக்காகப் பலியாக வேண்டும். நான் முதல் ஆளாக இருப்பேன்” எனக் கூறிப்  போராட்டத்தைத் தொடர்ந்தார். ‘இந்தி எதிர்ப்புப் போரின் தளபதி’ என அப்போதைய அரசு குற்றம் சுமத்தி இவரைச் சிறையில் அடைத்தது.
 
தமிழ்நாட்டில் கல்வி, வேலை வாய்ப்பு, அலுவலகப் பயன்பாடு, வழிபாட்டு நிலை என எல்லா இடத்திலும் தமிழே இருக்க வேண்டும் என்பதைப் பரப்பினார். தமிழ்நாட்டில் தமிழ், கல்வி மொழியாக இருந்தால்தான் தமிழ்நாட்டில் அறிஞர் பெருமக்களும் அறிவியலாளர்களும் தோன்றுவர் என்றார். மக்களுக்கு இவற்றை உணர்த்த, ‘தமிழ் உரிமைப் பெருநடைப் பயணம்’ மேற்கொள்ளத் திட்டமிட்டார். நாடு முழுவதும் வரவேற்பு பெருகியது. இதனால் தம் ஆட்சி கவிழும் என எண்ணிய காங்கிரசு அரசாங்கம் தமிழ்ப் போராளி இலக்குவனாரை இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்து, சிறையில் அடைத்தது.
 
பிற நாடுகளில் மொழி அறிஞர்களைப் போற்றுகின்றனர். நம் நாட்டில் போற்றாவிட்டாலும் பரவாயில்லை. தண்டிக்கிறார்களே என மனம் வருந்தினார். எனினும் தமிழ் காக்கும் கொள்கையில் இருந்து பின் வாங்கவில்லை. வாழ்க்கை முழுவதையும் தமிழ்நலம் நாடிய போராட்டத்திலேயே செலவழித்தார்.
 
மொழிக்காகச் சிறை சென்ற மொழி அறிஞர், படிக்கும் பொழுதே மொழிபெயர்ப்புக் காவியம் படைத்த படைப்பாளர், தம் தமிழ்த் தொண்டால் பல கல்லூரிகளில் வேலை வாய்ப்பை இழந்தும் மனம் தளராதவர், தாம் பெற்ற ஊதியத்தையும் தம் வாழ்நாளையும் தமிழுக்காகவே செலவிட்டவர், தமிழ்ப் போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (17.01.1909 - 03.09.1973). 
 
செந்தமிழ் மாமணி இலக்குவனாரைப் போற்றுவோம்! இலக்குவனார் வழியில் இனிய தமிழைக் காப்போம்!

No comments:

Post a Comment

Followers

Blog Archive