Thursday, October 2, 2014

புதிய அரசிற்கு வாழ்த்துகள்!


புதிய அரசிற்கு வாழ்த்துகள்!

pannerselvam01
new_tamilnadu_cabinet
  எளிமையின் காரணமாக, இரண்டாம் முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு பன்னீர்செல்வம் தலைமையிலான புதிய அரசிற்கு வாழ்த்துகள்! தங்கள் தலைவியின் நிழலவையாகத்தான் இந்த அரசை நடத்துவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! எனினும் தங்கள் தலைவி, தமிழ்நலச்செயல்களில் ஈடுபட்டதை நிறுத்தாமல் தொடர வேண்டும். தமிழ் ஈழம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் முன்னிலும் ஈடுபாடு காட்ட வேண்டும். இத்தகைய செயல்கள்தாம் அவருக்கு உலக அளவில் பரிவான போக்கை அமைத்துத்தந்ததை உணர வேண்டும். அதே நேரம் தமிழ்நாட்டில் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சிறைக் கொட்டடியிலும் கொடுமையாக ஈழத்தமிழர்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதை உடனே நிறுத்த வேண்டும். திபேத்து மக்கள் இங்கே உரிமையுடன் வாழும் பொழுது தமிழ் மக்களுக்கு மட்டும் ஏன் தண்டனை வாழ்க்கை என்பதை உணர வேண்டும். எனவே, அவர்களும் நம் நாட்டுக் குடிமக்கள் போல் உரிமையுடன் வாழ வகை செய்ய வேண்டும்.
  மத்திய அரசுப்பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப் பாடமாக நடைமுறைப்படுத்துவது பாராட்டிற்குரியது. ஆனால், ஆண்டு தோறும் ஒரு வகுப்பு என்ற நிலை இல்லாமல் இந்த ஆண்டு முதலே அனைத்து நிலைகளிலும் தமிழை அறிமுகப்படுத்த வேண்டும்.
  தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலப்பள்ளிகளாக மாற்றும் கொடுமைகளை உடனே நிறுத்த வேண்டும். தமிழ்வழிப் பள்ளிகளுக்கும் தாய்த்தமிழ்ப்பள்ளிகளுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு தர வேண்டும். வட்டம் தோறும் தரமான தமிழ்வழிப் பள்ளிகளை நிறுவ வேண்டும்.
  கூடுதல் முயற்சி எடுத்து, அனைத்துக்கோயில்களிலும் தமிழ் வழிபாடு இலங்க ஆவன செய்ய வேண்டும்.
  இயற்கை வேளாண்மைக்கும் சுற்றுச் சூழலுக்கும் எதிரான அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
  தமிழ்நாட்டில் தமிழே தலைமை நிலையில் இருக்கவும் தமிழரே முதன்மை நிலையில் இருக்கவும் உரியன ஆற்ற வேண்டும்.
  கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம்
  முடிந்தாலும் பீழை தரும். (திருக்குறள் 658) என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் பொய்யா மொழியை உள்ளத்தில் நிறுத்தி நேர்மையும் தூய்மையும் மிக்க ஆட்சியை நல்க வேண்டும்.
  இவையெல்லாம் தங்கள் ஆட்சிக்கும் கட்சிக்கும் தலைவிக்கும் புகழ் சேர்க்கும் என்பதை உணர்ந்து தமிழ்நல ஆட்சியை நடத்திச் சிறப்புற வாழ்த்துகிறோம்.
நீடிக்கட்டும் இவ்வாட்சி! தழைக்கட்டும் தமிழராட்சி
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
புரட்டாசி 12, 2045 / செப்.28,2014
http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader.png
 http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/04/thamizhnaatu01-488x560.jpg


No comments:

Post a Comment

Followers

Blog Archive