ஓணம் தமிழ்நாட்டு விழாவே!
இலக்குவனார் திருவள்ளுவன்

கடந்த ஆயிரம் ஆண்டுகளாக ஓணம் கொண்டாடப்படுவதாகக் கேரள மக்கள்
தெரிவிக்கின்றனர். இதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று பத்துநாள் கொண்டாடப்படும்
இவ்விழாவின் பத்தாம் நாளாகிய ஓணத்தன்று யானைகளைச் சிறப்பாக அழகூட்டி
நல்லுணவு படைத்து ஊர்வலமாக அழைத்து வருவது.

இன்றைய கேரளம் என்பதே முந்தைய செந்தமிழ் வழங்கிய சேரநாடுதானே. தாங்கள் தமிழர் வழி வந்தவர் என்பதையும் தங்கள் மொழித் தமிழ்ச்சேய் மொழி என்பதையும் மறைத்து விடுவதால் உண்மையான வரலாறு அந்நாட்டு மக்களுக்கே தெரிவதில்லை. சேரநாட்டுச் சிறப்பையும் சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியச் சிறப்பையும் கேரளச்சிறப்பாகவும் மலையாளச் சிறப்பாகவும் சொல்வதுமே அவர்கள் வழக்கம். கேரளத்தினர், பிற தமிழ்ச் சேய் இனத்தவரைப் போல் தமிழ்ப் பகை உணர்வுடன் நடந்து கொள்வதால் தமிழ்வழிச் சிறப்பை மறைப்பதில் பெருமை கொள்கின்றனர். கானமயிலாடக் கண்ட வான்கோழி தானும் சிறகு விரித்து ஆட முற்படுவதுபோல் மலையாளத்திற்குச் செம்மொழித்தகுதி கேட்கையிலும் சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்களையே தங்கள் தொல் இலக்கியங்கள் போல் காட்டி உள்ளனர். எனவே, தமிழர்க்குரிய விழாக்களில் ஒன்றே ஓண நன்னாள் என்பதை ஏற்க மாட்டார்கள். எனினும் அருகிக் காணப்படும் நடுநிலையாளர் களுக்காகவும் நமக்காகவும் இவ்வுண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
புலவர் மாங்குடி மருதனார் அவர்களால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
எழுதப்பெற்ற இலக்கியம்தான் மதுரைக் காஞ்சி. மதுரையை நன்கு படம் பிடித்துக்
காட்டியிருப்பார் சங்கப்புலவர். மதுரை மாநகரின் அன்றாடநிகழ்வுகளைக்
குறிப்பிடுகையில் ஓண நன்னாள் கொண்டாடப்படுவது குறித்தும் பின்வருமாறு
கூறியுள்ளார் :
கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்
மாயோன் மேய ஓண நல் நாள்
(மதுரைக்காஞ்சி: 590-591)
கூட்டமாகத் திரண்டு வந்த அவுணர்களை வெற்றி கண்ட மாயோன்(திருமால்)
தோன்றிய ஓண நன்னாளில் விழா எடுத்தமையைக் குறிப்பிடுகின்றார் புலவர். இதைத்
தொடர்ந்து,

சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்

சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங் களிறு ஓட்டலின், காணுநர் இட்ட
(மதுரை க்காஞ்சி 596-597)
என்னும் அடிகள் மூலம், வண்டு மொய்க்கும் பூமாலைகள் அணிந்த யானைகளிடையே
நடக்கும் போரினைக் குறிப்பிடுகிறார். எனவே, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
ஓணநாளன்று யானையை அழகு படுத்துவது வழக்கமாக இருந்துள்ளது.
ஓணம் ஏன் கொண்டாடப்படுகிறது எனக் கேரளர்கள் கூறுவதைப் பார்ப்போம்.
மாவலி (மாபலி)என்னும் மன்னன் சிறப்பான முறையில் கேரளத்தைஆட்சி செய்து
வந்தானாம். திருமாலே அவரிடம் வாமனனாகக் குள்ள வடிவம்பெற்று வந்து மூன்றடி
மண் தருமமாகக் கேட்டாராம். (கொடுப்பது கொடை என்பது போல் தருவது தருமம்
எனப்படும்.) மன்னன் கொடுக்க இசைந்ததும் பேருருவம் கொண்டு ஓரடியைப்
பூமியிலும் மற்றோர் அடியை வானத்திலும் வைக்க மூன்றாம் அடி வைக்க
இடமில்லையாதலால் மன்னன் தன் தலையில் வைக்கச் சொன்னானாம். அவ்வாறே மன்னனின்
தலையில் மூன்றாம்அடியை வைத்து அவனைப் பாதாளத்தில் தள்ளிவிட்டாராம்.
கொல்லப்பட்ட மன்னன் மாவலி தான் மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளதால்
ஆண்டிற்கு ஒருமுறை அவர்களைச் சந்திக்க வரம் கேட்டானாம். திருமால் வரம்
தந்தாராம். அவ்வாறு பாதாள உலகில் இருந்து ஆண்டு தோறும் வரும் மன்னன் மாவலி
தங்கள் இல்லங்களுக்கும் வருவார் என நம்பி மக்கள் அழகுக் கோலங்கள் இட்டு
அவரை வரவேற்கின்றனராம்.

ஓணம் விழாவிற்குரிய கதை பகுத்தறிவிற்கு ஏற்றதல்ல என்பதால் அதனைக்
கொண்டாட வேண்டா என எண்ண வேண்டா. அறிவுக்குப் பொருந்தாக் கதைகளைக்
கற்பிக்காமல் இருந்தால் போதும். தொடக்கத்தில் ஆவணித் திங்களே
ஆண்டுப்பிறப்பாக இருந்தது. அப்பொழுது ஆண்டுப்பிறப்பை வரவேற்கும் வகையில் ஓண
நன்னாள் கொண்டாடப்பட்டது. பின்னர் தைத் திங்கள் ஆண்டுத் தொடக்கமாக மாறிய
பின்பு ஓணம் பிற தமிழ்ப்பகுதிகளில் மறைந்து விட்டது. ஆனால், மாயோன் மேய காடுறை உலகம் என்கின்றார்
அல்லவா தொல்காப்பியர்? மாயோன் மேய ஓண நல் நாள் என்றல்லவா
சொல்லப்படுகின்றது. எனவே மாயோனுக்குரிய காட்டுலகம் சார்ந்த மலை நாடான
சேரளத்தில் - கேரளத்தில் அவ்விழா தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
தன்மதிப்பு இயக்கக் கோட்பாட்டாளரான பேராசிரியர் சி.இலக்குவனார்
தீபாவளியைக் கொண்டாடுவதில்லை. எனினும் அதனைக் கொண்டாடுவது குறித்து அவர், காலங்காலமாகக் கொண்டாடிய விழாவைக் கைவிடும் போக்கில் மக்கள் இல்லை. எனவே, தீபாவளி
கொண்டாடுவதற்குக் கூறப்படும் பொய்யான கதைகளைக் கற்பிக்காமலும்
சிக்கனமாகக் கொண்டாடும்படி அறிவுறுத்தியும் கொண்டாடச் செய்ய வேண்டும்.
திருவிழா என்பது மக்களுக்கு உற்சாகமும் உற்பத்தியாளர்களுக்கும்
வணிகர்களுக்கும் பொருள்வரவும் தரக்கூடியதாக உள்ளது. எனவே, எளியமுறையிலும் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு அளிக்கும் வகையிலும் கொண்டாட வேண்டும் என்பதை மக்களுக்கு வலியுறுத்த வேண்டும் என்றார்.

தீபாவளிக்குப்பேராசிரியர் கூறியதே ஓணத்திற்கும் பொருந்தும். களைப்பை
நீக்கும் களிப்புடனும் உவகை தரும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படட்டும் ஓணம்!
ஓணம் கொண்டாடும் மக்களுக்கு நம் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்! அதே நேரம்
அவ்விழாவைக் கொண்டாடுபவர்கள் உலகின் மூத்த மொழி வழியும் இனவழியும்
பிறந்தவர்கள் தாங்கள் என்ற உணர்வு பெற்றுத் தோழமை உணர்வுடன் தமிழ் மக்களை
எண்ணட்டும்!
No comments:
Post a Comment