Monday, April 18, 2011

andre' sonnaargal 46 - buildings 8 : அன்றே சொன்னார்கள் 46 - கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 8

 கட்டட வகைகளும் 

அறிவியல் அன்றோ – 8

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : April 18, 2011


அகலமாகவும் உயரமாகவும் செல்வச் செழிப்பைக் காட்டும் வகையிலும் வீடுகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருந்தன எனப் பார்த்தோம். இவ்வாறு, கட்டடவியல் இலக்கணத்திற்கேற்ப நன்கு கட்டப்பட்ட வீடுகளை நன்மனை என்றனர். புலவர் ஓரம்போகியார்(ஐங்குறுநூறு: 292.4; 294.4) புலவர் பரணர்(நற்றிணை : 280.9), புலவர் கண்ணகனார்(நற்றிணை 79.2), புலவர் மதுரை மருதனிளநாகனார்(நற்றிணை : 392.7; அகநானூறு 193.11) ஆகியோர் நன்மனை (நல்மனை) என்று குறிப்பிடுகின்றனர்.
வேண்டியவர்க்கு வேண்டியவாறு வழங்கும் வகையில் உணவுப் பொருள்கள் நிறைந்த பெரிய நல்ல வீடுகளாய் அமைந்துள்ளன என்பதைப் புலவர் நக்கீரர்
கூழ்உடை நன்மனை (நற்றிணை : 367.5) என்பதன் மூலம் தெரிவிக்கிறார்.
புறத்திணை நன் நாகனார்    புதுமைவளம் நிறைந்த பெரிய வளமனையை
யாணர் நன்மனை (புறநானூறு :  376.6) என்று குறிப்பிட்டுள்ளார்.

புலவர் ஒருவர் நற்றிணையில் (132.5) நன்னகர் என்று நல்லமுறையில் அமைக்கப்பட்ட மாளிகையைக் குறிப்பிடுகிறார்.
புலவர் நக்கீரர்  உறந்தை நகரைப்போன்று செல்வம் மிக்க நல்ல மாளிகையை
உறந்தை அன்ன
நிதியுடை நல் நகர் (அகநானூறு: 369.15) என்கிறார்.

அழகிய தோற்றம் அளிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட நல்ல இல்லம் பற்றிப் புலவர் கல்லாடனார்
வினைபுனை நல்லில் (புறநானூறு : 23.10) எனக் குறிப்பிடுகிறார்.


இப்பொழுது நாகரிகச் சிறப்பு மிக்க மாடி வீடுகள் உள்ளமை போல் அப்பொழுதே வீடுகள் போதிய திறந்த வெளி, தோட்டம், மாடிப்பூங்கா ஆகியவற்றுடன் நன்கு அமைக்கப்பட்டிருந்தன. முன்றில், படப்பை, மனை, என மூன்றையும் ஒரே பாடலில் (நற்றிணை 44) புலவர் பெருங்கௌசிகனார் குறிப்பிடுவதன் மூலம் முற்றம், தோட்டம் முதலியன அமைந்த பெரிய வீடுகள் இருந்தமையை அறியலாம். ஆசிரியர் புலவர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பொலிவும் செல்வமும் நிறைந்து விளங்கும் மாளிகையின் முற்றத்தைப்
பொலிந்து திருநகர் முற்றம் ( மலைபடுகடாம் : 548) என்கிறார்.

வீட்டிற்கு முன்புறம் பெரிதான முற்றம் இருக்கும் வகையிலேயே வீடுகளை அமைத்துள்ளனர். இனிய பெரிய மாளிகையின் அகன்ற முற்றத்தைப் புலவர் குண்டுகட் பாலியாதனார்
இன்நகர் அகன்கடைத்தலை (புறநானூறு : 387.17) என்கிறார். புலவர
நம்பி குட்டுவனார் பாடலிலும்  (நற்றிணை : 236.8-10) முன்றில் பற்றிய குறிப்பு உள்ளது.
புலவர் மாமூலனார், வெண்மையான மணல் நிரப்பப்பட்டு உயர்ந்த பொலிவு மிகுந்த வாயிலை உடைய நெடிதுயர்ந்த மாளிகையை
வெண் மணல் நிவந்த பொலங் கடை நெடு நகர் (அகநானூறு: 325.2)
என்கிறார். வீடுகளின் முன்னர் வெண்மணலைப் பரப்பும் வகையில் வீட்டு முன்பகுதி அகலமானதாகவும் பேரளவினதாகவும் இருந்துள்ளது இப்பாடல் மூலமும் தெரிய வருகிறது..
வழிவழியே வந்த தொன்மைச் சிறப்பு மிக்க மாளிகையைத் தொல்நகர் என அழைத்துள்ளனர்.
தொல் நகர் என ஆசிரியர் காப்பியாற்றுக் காப்பியனார் (பதிற்றுப்பத்து: 31.28), புலவர் பரணர் ஆகியோர்  (பதிற்றுப்பத்து : 47.8) குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பெற்ற சங்க இலக்கியக் காலத்திற்கு முன்பே சிறப்பான மாளிகைகளை நம் முன்னோர் அமைத்து இருந்தனர் எனலாம்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive