Tuesday, March 15, 2011

skyscrapers 2/3 - andre' sonnaargal: அன்றே சொன்னார்கள்39 வானுயர் கட்டடங்கள் 2/3

அன்றே சொன்னார்கள்39

natpu வானைத் தொடும் அளவிற்கு உள்ளதாகக் கருதும் வகையில் உயர்ந்த மாடிக் கட்டடங்கள் இருந்தன என்பதற்காக வான் தோய் மாடம் என்றும் விண்ணை நெருங்கும் அளவிற்கான உயரம் எனக் கருதும் அளவிற்கு மாடிகள் அமைந்த கட்டடங்கள் இருந்தன என்பதற்கு அடையாளமாக விண்தோய் மாடம் என்றும் சங்க இலக்கியங்களில் குறிக்கப் பெற்றுள்ளன. நகரம் என்பதே பல மாடிகள் உடைய வீடுகள் நிறைந்தது என்பதே வழக்கம் என்னும் அளவிற்கு நகரங்கள் இருந்தன. முந்தைய கட்டுரையின் தொடர்ச்சியாகப் பழந்தமிழர் கட்டடச் சிறப்பை அறிய, மேலும்  சில சான்றுகளைக் காண்போம்.

தடாரிஇசை முழக்கம்,  மலைகள் அடுத்தடுத்து
உள்ளன போல் நெருக்கமாக அமைந்த மாடி வீடுகளில் எதிரொலித்ததாக
      மலைக்கணத்து அன்ன மாடம் சிலம்ப (புறநானூறு : 390.7)
என்னும் அடி மூலம் புலவர் ஔவையார் கூறுகிறார்; (சிலம்ப - எதிரொலிக்க). எனவே, மாடி வீடுகள் எனில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இராமல் தொடர்ச்சியாக அமைந்திருந்தன என்பதை உணரலாம். 
     நிரை மாடம் ஊர்குவோர் (பரிபாடல் 10.27)
என்று புலவர் கரும்பிள்ளைப் பூதனார் மதுரையைக் குறிக்கும் அடியும் மாடிக்கட்டடங்கள்  வரிசையாக அடுத்து அடுத்து அமைந்துள்ளன என்பதை உணர்த்துகின்றன.

புலவர் (மதுரைக் கணக்காயனார் மகனார்) நக்கீரனார்  மதுரையில் மாடிக்கட்டடங்கள் நிறைந்த தெருக்கள் இருந்தமையை
      மாடமலி மறுகின் கூடல் (திருமுருகாற்றுப்படை : 70)
என்னும் அடியில் விளக்குகின்றார். (மறுகு - தெரு; கூடல்- மதுரையின் மறு பெயர்; கணக்காயனார்-ஆசிரியர்)

பன்மாடிக் கட்டடங்கள் தொன்று தொட்டே இருந்துள்ளன என்பதைப் புலவர் (மதுரைக் கணக்காயனார் மகனார்) நக்கீரனார், மதுரை மாநகரைக் குறிப்பிடும்,
      மாடம் ஓங்கிய மல்லன் மூதூர் (நெடுநல்வாடை : 29)
என்னும் அடி மூலம் நமக்கு உணர்த்துகின்றார்.

மாடி வீடுகள் நிறைந்த மதுரை மாநகர் என்பதைப் புலவர் கோவூர்க்கிழார்
       மாட மதுரை (புறநானூறு : 32.5)
என்னும் அடியில் தெரிவிக்கின்றார்.

மாடங்கள் மிகவும் வெண்மையாக அமைந்திருக்கும் என்பதனைப் புலவர் ஊன்பொதி பசுங்குடையார்
      புதுப்பிறை அன்ன சுதைசெய் மாடத்து (புறநானூறு : 378.6)
என்னும் அடியில் விளக்குகிறார். (சுதை - சுண்ணாம்பு)

விளங்கில் என்னும் ஊரில், மாடிக்கட்டடங்களின் சுவர்களில் பதிக்கப்பெற்ற மாணிக்கங்கள் ஒளி வீசுவதைப் புலவர் பொருந்தில் இளங்கீரனார்
     கதிர்விடு மணியின் கண்பொரு மாடத்து (புறநானூறு : 53.2)
என்னும் அடியில் விளக்குகிறார்.
தனக்குரிய இடம் எல்லாம் பொன்னாலும் மணியாலும் சிறப்புப் பெற்ற உயர்ந்த ஏழடுக்கு மாளிகைகள் இருந்தன என்பதைப் புலவர் (காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வணிகனார் மகனார்) நப்பூதனார்,
        இடஞ்சிறந்து உயரிய எழுநிலை மாடத்து (முல்லைப்பாட்டு : 86) என்னும் அடியில் விளக்குகிறார்.

இத்தகைய உயர்ந்த கட்டடங்களில் எரியும் விளக்குகளினால் கப்பல்களை நகரை நோக்கிச் செலுத்துவர் எனக் கலங்கரை விளக்கம்போல் உயர்வாக உள்ள கட்டடச் சிறப்பைப் புலவர் மருதன் இளநாகனார்,
      மாட ஒள்எரி மருங்கு அறிந்து ஒய்ய (அகநானூறு : 255.6)
என்னும் அடியில் தெரிவிக்கின்றார்.  (ஒய்ய-கப்பலைச் செலுத்த)
உறந்தை மாநகரில் உயர்ந்த மாடிக்கட்டங்கள் சிறந்து இருந்தமையைப் புலவர் பெருஞ்சித்திரனார்,
     உயர்நிலை மாடத்து (புறநானூறு : 67.9)
என்னும் குறிப்பால் உணர்த்துகிறார்.

கானப்பேரெயில் (இன்றைய காளையார்கோயில்) நகரில், மதில்கள் (சுவர்கள்) வானைத் தொடுவது போன்ற அளவிற்கு உயர்வாக இருந்தமையைப், புலவர் ஐயூர் மூலங்கிழார், 
     வான்தோய் வன்ன புரிசை விசும்பின் (புறநானூறு : 21.3)
என்னும் அடி மூலம் விளக்குகிறார்.

வானைத் தொடும் அளவிற்கு எனப் புலவர்கள் குறிப்பிடுவது கற்பனை கலந்த உயர்வு நவிற்சி அல்ல என்பதற்குச் சான்று, புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்,  இமயமலையைப் பற்றிக் குறிக்கும்பொழுது வானைத் தொடுவது போன்ற இமயமலை என்னும் பொருளில்,
      வடதிசை யதுவே வான்தோய் இமையம்(புறநானூறு :  132)
எனக் குறிப்பதில் இருந்து புரிந்து கொள்ளலாம். இயல்பிற்கு மீறிய உயரக் கட்டடங்களை மட்டுமே இவ்வாறு வானைத் தொடும் அளவிற்கு உள்ளதாகக் குறிப்பிட்டு அவற்றின் உயர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

நம் முன்னைத் தமிழர்களின் நயமிகு கட்டடச் சிறப்பைத் தொடர்ந்து அடுத்தும் காண்போம்!
                                 - இலக்குவனார் திருவள்ளுவன்



Comments


No comments:

Post a Comment

Followers

Blog Archive