Wednesday, February 9, 2011

Newton second law in Paranar Poem: andre' sonnaargal 21: அன்றே சொன்னார்கள் பரணர் பாடலில் நியூட்டன் விதி

>>அன்றே சொன்னார்கள்

அன்றே சொன்னார்கள் பரணர் பாடலில் நியூட்டன் விதி

                                                                                                                

natpu
நியூட்டன் விதிகள் என நம்மால் போற்றப்படுவன,  அறிவியலாளர் ஐசக் நியூட்டனின் (திசம்பர் 25,1642-மார்ச்சு 20,1727) கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத் தகுந்தனவாகும்.விசை, விரைவு பற்றிய இவ்விதிகளுள் நியூட்டனின் இரண்டாம் விதி பற்றி மட்டும் நாம் பார்க்கப் போகிறோம்.

திசைவேகம், பொருளின் தாக்கும் விசையைப் பொறுத்து அமையும் என்கிறார் அவர். இதன்படி, ஒரு நேர்க்கோட்டில் செல்லும் விசை, குறிப்பிட்ட ஒரு பொருளின் மீது தாக்கும்போது அந்த விசை வேகம் மாறுபட்டு அமையும் அல்லது குறையும். 18ஆம் நூற்றாண்டில் விசைவேக விதியைக் கண்டுபிடித்தார் அறிவியலாளர் நியூட்டன். இதே விதியைப் புலவர் பரணரும் எடுத்துக்காட்டு மூலம் நமக்கு விளக்குகிறார்.

கடையெழு வள்ளல்களில் ஒருவன் வல்வில் ஓரி என அழைக்கப்பெறும் ஆதன் ஓரி என்னும் சிறப்பு மிக்க மன்னன். இம்மன்னன் வில் வித்தையில் சிறந்தவன் என்பதை வல் வில் என்று குறிக்கப்படுவதில் இருந்தே நாம் புரிந்து கொள்ளலாம். வில்லுக்கு விசயன் என நம் நாட்டவர் அல்லாத மன்னனை அல்லது கற்பனையான கதைப் பாத்திரத்தைப்  போற்றும் நமக்கு வில்லுக்கு ஓரி என்று கற்றுக் கொடுத்திருந்தால் இம்மன்னனின் சிறப்பை அறிந்திருப்போம். நாமக்கல் பகுதியில் உள்ள கொல்லிமலைக்கு மன்னனாகச் சிறந்து விளங்கியவன் இவன்.

மன்னன் வல்வில் ஓரி ஒரு முறை காட்டிற்குச் சென்று வேட்டையாடுகையில் அவ்வழியே வந்த புலவர் பரணர் பார்த்துவிட்டு உடனே, அக்காட்சியைப் பாட்டிலே படம் பிடித்து நிலைக்கச் செய்துவிட்டார்.

வல்வில் ஓரி எய்த ஒரே ஓர் அம்பு நேர்க்கோட்டில் அமைந்த ஐந்து உயிர்களைப் பறித்து விட்டது. அவன் யானையின் மீது அம்பு தொடுத்தான். யானை மீது பாய்ந்த அம்பு அதனை வீழ்த்தியதுடன் தன் கடமை முடிந்து விட்டது என்று நின்று விடவில்லை. அந்த யானை மீது பாயலாம் எனப் பார்த்திருந்த புலியின் வாயில் ஊடுருவி, வெளியேறி அப்பக்கம் குறுக்கே வந்த மானையும் ஊடுருவிக் கொன்று, அடுத்து இருந்த பன்றியை வீழ்த்தி, உடும்பில் பாய்ந்து அதனையும் தைத்து மடியச் செய்து விசை வேகம் படிப்படியே குறைந்ததால் நின்று விட்டது.

வில்லில் இருந்து வேகமாக விடுபட்ட அம்பு போகப்போக வேகம் குறைந்து அதற்கேற்றவாறு சிறிய சிறிய உயிர்களை மடியச் செய்து இறுதியில் செயல் இழந்தது எனப் புலவர் விளக்கி உள்ளார். மன்னன் வல்வில் ஓரியின் வில்வித்தைச் சிறப்பைக் கூறும் அறிவியல் உண்மை அடங்கிய பாடல் வரிகள் பின்வருமாறு: 

       வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி   
      பேழ் வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇ,     
      புழல் தலைப் புகர்க் கலை உருட்டி, உரல் தலைக்
     கேழற் பன்றி வீழ, அயலது   
     ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும்
    வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன்               (புறநானூறு 152)
     
(வேழம்-யானை; பகழி-அம்பு; உழுவை-புலி; புகர்க்கலை - புள்ளி மான்; கேழல் பன்றி-ஆண் பன்றி; புற்றத்து உடும்பில் - புற்றில் உள்ள உடும்பின் மீது)

இப்பாடல் வரிகள் மூலம் வில்லில் இருந்து விடுபட்டு விரைவாக வெளியேறும் அம்பின் விசை போகப்போகக் குறையும் தன்மையை - விசைவேக இலக்கணத்தை - ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே புலவர் பரணர் விளக்கி உள்ளதை அறியலாம்.

இதனை வரலாற்று நிகழ்வைக் கூறும் இலக்கிய வரிகளாகக் கருதிய நாம் இதில் புதைந்துள்ள அறிவியல் உண்மையைப் புரிந்து கொள்ளாமல் போனது ஏனோ?
- இலக்குவனார் திருவள்ளுவன்



Comments

No comments:

Post a Comment

Followers

Blog Archive